விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்க மாணவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு
விபத்தில்லா தர்மபுரி மாவட்டத்தை உருவாக்க மாணவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.
தர்மபுரி,
தர்மபுரி வட்டார போக்குவரத்து துறை சார்பில் 30-வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. இதன் நிறைவு விழா தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரகமதுல்லாகான், உதவி கலெக்டர் சிவன்அருள், துணை போக்குவரத்து ஆணையர் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் வரவேற்று பேசினார்.
விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு சாலைபாதுகாப்பு வாரவிழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
விழாவில் அவர் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு விபத்துகள் கணிசமாக தடுக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த 1,501 சாலைவிபத்துகளில் 290 பேரும், 2018-ம் ஆண்டில் நடந்த 1,447 விபத்துகளில் 204 பேரும் உயிரிழந்து உள்ளனர்.
நடப்பு 2019-ம் ஆண்டில் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் ஹெல்மெட்டும், 4 சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட்களையும் அணிய வேண்டும். விபத்தில்லா தர்மபுரி மாவட்டத்தை உருவாக்க பொதுமக்கள், மாணவ,மாணவிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.
இந்த விழாவில் தர்மபுரி நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி, கூட்டுறவு சங்க தலைவர்கள் கோவிந்தசாமி, சிவப்பிரகாசம், பெரியண்ணன், ஆறுமுகம், செல்வராஜ், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பூக்கடை ரவி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராஜாமணி, அன்புசெழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story