குற்றாலத்தில் பாலிடெக்னிக் மாணவர் மர்மசாவு: உடலை வாங்கச் சொல்லி போலீசார் கட்டாயப்படுத்துகிறார்கள் உதவி கலெக்டரிடம் பெற்றோர் மனு
குற்றாலத்தில் மர்மமான முறையில் இறந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவரின் உடலை வாங்கச் சொல்லி போலீசார் கட்டாயப்படுத்துகிறார்கள் என்று உதவி கலெக்டரிடம், பெற்றோர் மனு கொடுத்தனர்.
நெல்லை,
திருப்பூர் மாவட்டம் குட்டகம் புளியம்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் கார்த்திக்ராஜா (வயது 19). இவர் அங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அப்போது அவருக்கும், ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதலுக்கு இருவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி நெல்லை மாவட்டம் குற்றாலத்துக்கு வந்தனர்.
அங்கு அவர்கள் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினர். கடந்த 3-ந் தேதி இரவு விடுதி அறையில் கார்த்திக் ராஜா மர்மமான முறையில் இறந்தார். அவருடைய உடல் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடந்து உள்ளது.
இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது காதலியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் விடுதியில் இருந்த 2 பேர் அந்த பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக் ராஜாவின் காதலி கொடுத்த புகாரின்பேரில் விடுதி மேலாளர் செய்யது ஜலாலுதீன், பணியாளர் கருப்பசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் கார்த்திக்ராஜாவின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தனர். இதையடுத்து நெல்லை உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
கார்த்திக் ராஜா சாவு குறித்து நெல்லை உதவி கலெக்டர் மணிஸ்நாரணவரே நேற்று விசாரணை நடத்தினார். இந்த விசாரணைக்கு கார்த்திக் ராாஜாவின் தந்தை ராஜ்குமார், தாய் சரசு ஆகியோர் ஆஜரானார்கள். அப்போது அவர்கள் உதவி கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், கார்த்திக் ராஜாவின் சாவில் உள்ள மர்மம் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும். அந்த பெண் கைப்பட எழுதிய கடிதத்தை போலீசாரே கிழித்து போட்டு உள்ளனர். இதன் பின்னணி என்ன என்று விசாரிக்க வேண்டும். போலீசார் உண்மையை விசாரிக்காமல் உடலை வாங்குங்கள் என்று கூறி எங்களை கட்டாயப்படுத்துகிறார்கள் என்று கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story