தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு பெரிய சரக்கு கப்பல் வருகை


தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு பெரிய சரக்கு கப்பல் வருகை
x
தினத்தந்தி 11 Feb 2019 10:15 PM GMT (Updated: 11 Feb 2019 9:06 PM GMT)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு 14.20 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட பெரிய சரக்கு கப்பல் நேற்று வந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு 14.20 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட பெரிய சரக்கு கப்பல் நேற்று வந்தது.

இதுகுறித்து வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு பெரிய கப்பல்கள் வரும் வகையில் மிதவை ஆழம் அதிகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 28-11-2018 அன்று 14 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட கப்பல், 82 ஆயிரத்து 170 டன் சரக்குடன் துறைமுகத்துக்கு வந்தது. இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் 14.20 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட எம்.வி.ஸ்பகியா வேவ் என்னும் பெரிய சரக்கு கப்பல் நேற்று தூத்துக்குடிக்கு வந்தது. இந்த கப்பல் மாலை 4.50 மணிக்கு 9-வது சரக்கு தளத்துக்கு வந்தடைந்தது. 229 மீட்டர் நீளமும், 36.80 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பல் அரபு நாட்டில் உள்ள மினாசகர் துறைமுகத்தில் இருந்து 84 ஆயிரத்து 502 டன் சுண்ணாம்பு கல்லை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது. கப்பலில் சரக்குகளை கையாளும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

14.20 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட கப்பலை கையாள உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற கப்பல்கள் மூலம் நிலக்கரி, சுண்ணாம்புக்கல், ராக்பாஸ்பேட் மற்றும் இதர சரக்குகளை கையாளுவதால், உபயோகிப்பாளர்களுக்கு பொருளாதார அளவீடு மேம்படும்.

14.20 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட கப்பல்களை கையாண்டதால் இனிவரும் காலங்களில் துறைமுக உபயோகிப்பாளர்கள் ஊக்கத்துடன் அதிகளவில், இத்தகைய பொது சரக்கு மற்றும் சரக்கு பெட்டக கப்பல்களை வ.உ.சி. துறைமுகத்துக்கு கொண்டு வர முடியும்.

இத்தகைய அதிக மிதவை ஆழம் கொண்ட கப்பல்களை கையாளுவதால், அதிவிரைவில் வ.உ.சி. துறைமுகம் சரக்கு மாற்று முனையமாக திகழும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story