திருவேங்கடம் அருகே கோவிலில் வழிபாடு செய்வதில் பிரச்சினை; போலீஸ் குவிப்பு


திருவேங்கடம் அருகே கோவிலில் வழிபாடு செய்வதில் பிரச்சினை; போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 11 Feb 2019 10:45 PM GMT (Updated: 11 Feb 2019 9:06 PM GMT)

திருவேங்கடம் அருகே கோவிலில் வழிபாடு செய்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக ஏற்பட்டுள்ள பதற்றத்தை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருவேங்கடம், 

நெல்லை மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள குருஞ்சாக்குளம் கிராமத்தில் காந்தாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வழிபாடு நடத்துவது சம்பந்தமாக இருபிரிவினர் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரச்சினைக்குரிய இடத்தில் இருதரப்பினரும் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் பிரச்சினைக்குரிய இடத்தில் புரட்சி தமிழகம் கட்சியின் சார்பாக அக்கட்சியின் நிறுவனர் ஏர்போர்ட் மூர்த்தி தலைமையில் காந்தாரியம்மன் பீடத்தில் மாற்று ஏற்பாடு செய்து தொடர் வழிபாடு செய்ய உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அப்பகுதியில் பதற்றம் உருவானதை தொடர்ந்து சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் திருவேங்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கண்ணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யனார், பரமசிவன் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார், பிரச்சினைக்குரிய இடத்திலும், குருஞ்சாக்குளம் செல்லும் முக்கிய சாலைகளிலும் குவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் புரட்சி தமிழகம் கட்சியின் நிறுவனர் ஏர்போர்ட் மூர்த்தி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் திருவேங்கடம் வழியாக குருஞ்சாக்குளம் செல்ல முற்பட்டபோது, திருவேங்கடம் பஜாரில் வைத்து அவரது வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.

திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் திருமலைச்செல்வி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், சட்டபூர்வமாக மாவட்ட நிர்வாகத்துடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அனைவரும் திரும்பிச் சென்றனர். 

Next Story