தூத்துக்குடியில் குடிபோதையில் தகராறு: மின்மயான ஊழியர் அடித்துக்கொலை தம்பி கைது
தூத்துக்குடியில் மின்மயான ஊழியரை அடித்துக் கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் மின்மயான ஊழியரை அடித்துக் கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தூத்துக்குடி டி.எம்.பி. காலனியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவருடைய மகன் சிவமுருகன் (வயது 36). தூத்துக்குடியில் உள்ள மின்மயானத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருடைய தம்பி ஆபிரகாம் லிங்கம் (33). இவர் லாரி டிரைவராக உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு சிவமுருகன், தனது தம்பி ஆபிரகாம் லிங்கத்துடன் மின்மயானம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது குடித்துக்கொண்டு இருந்தார்.
குடிபோதையில் இருந்த அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது சிவமுருகன் குடும்பத்தை பற்றி தவறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அண்ணன்-தம்பி இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த ஆபிரகாம் லிங்கம் அந்த பகுதியில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து சிவமுருகனை அடித்ததாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயம் அடைந்த சிவமுருகன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலையில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆபிரகாம் லிங்கத்தை நேற்று கைது செய்தனர்.
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மின்மயான ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story