தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த வாலிபரின் உயர் சிகிச்சைக்கு உதவ வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் தாயார் மனு
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த வாலிபரின் உயர் சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும் என்று, அவருடைய தாயார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடந்தது. மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சங்கரநாராயணன், உதவி ஆணையாளர் (கலால்) சுகுமார் ஆகியோர் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி கருணாநிதிநகரை சேர்ந்த மகராஜன் மனைவி பிரம்மசக்தி என்பவர் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் வேலைக்கு சென்று கொண்டு இருந்த எனது மகன் விஜயகுமார் (வயது 25) என்பவர், துப்பாக்கி தோட்டா துளைத்ததில் படுகாயம் அடைந்தார். அவரது வலது காலில் குண்டுபாய்ந்து தொடை எலும்பு நொறுங்கி உள்ளது. அவருக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையும், மேல்சிகிச்சைக்கு உதவுவதாக அரசு உறுதி அளித்ததன் பேரில் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்து மாதம்தோறும் பரிசோதனைக்கு சென்று வருகிறோம். ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்தும் தொடை எலும்பு சேராததால், மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறி உள்ளனர். எனவே அரசு உறுதி அளித்தபடி எனது மகன் கால் குணம் அடைந்து பழைய நிலைக்கு திரும்புவதற்கான மருத்துவ செலவு முழுவதையும் அரசு ஏற்று உயர் சிகிச்சைக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.
ஆழ்வார்திருநகரி குருகாட்டூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தெற்கு கோட்டூர், வடக்கு கோட்டூர், குட்டியழகனூர், தொட்டியன்குடியிருப்பு, ராஜாங்கபுரம் கிராம மக்கள் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களது முக்கிய தொழில் விவசாயம் ஆகும். இந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் நெல்லை, திருச்செந்தூர், தூத்துக்குடி, நாசரேத், சாயர்புரம், நாலுமாவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். நாங்கள் பிரதான சாலைக்கு செல்ல வேண்டுமென்றால் தென்திருப்பேரை அல்லது ஏரலுக்கு செல்ல வேண்டும். இந்த 2 ஊர்களுக்கும் செல்வதற்கு வசதியாக 2 மினிபஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் ஒரு மினிபஸ் எங்கள் ஊர் வழியாக செல்வது இல்லை. ஆகையால் அரசு அனுமதி அளித்த வழித்தடத்தில் 2 மினிபஸ்களும் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
தூத்துக்குடி பூபால்ராயர்புரம் மக்கள் ஐக்கிய சங்க செயலாளர் பொன்னுவேல் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், பூபாலராயர்புரம், கிருஷ்ணராஜபுரம், வெற்றிவேல்புரம், சாமுவேல்புரம், மாணிக்கபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக செயின்ட் மேரிஸ் காலனி நீர்த்தேக்க தொட்டி அருகே காலியாக உள்ள இடத்தில் ஒரு பொது கிணறு அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.
தூத்துக்குடியில் அவசர சிகிச்சை நுட்பனர் பயிற்சி முடித்த சிலர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அளித்த மனுவில், தமிழக அரசு சுகாதாரத்துறையால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை நுட்பனர் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முடித்தவர்களை அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் பணி நியமனம் செய்ய வேண்டும். ஆனால் அனுபவத்தை மட்டும் வைத்து 8, 10-ம் வகுப்பு படித்தவர்களை பணி நியமனம் செய்து வருகின்றனர். ஆகையால் எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் எங்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
சாத்தான்குளம் பண்டாரபுரத்தை சேர்ந்த இசக்கியம்மாள் என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், எனக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். எனது கணவர் ஜெயக்குமார் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு நகையை அடகு வைத்தும், கடன் வாங்கியும் ரூ.1 லட்சம் கொடுத்தேன். அவர் திடீரென தலைமறைவாகி விட்டார். இதனால் நான் பணம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறேன். ஆகையால் எனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து கடனை அடைக்க பணம் பெற்று தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.
Related Tags :
Next Story