குறை தீர்க்கும் நாள் கூட்டம்: இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் கலெக்டரிடம், மாஞ்சோலை கிராம மக்கள் மனு


குறை தீர்க்கும் நாள் கூட்டம்: இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் கலெக்டரிடம், மாஞ்சோலை கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 12 Feb 2019 3:30 AM IST (Updated: 12 Feb 2019 2:37 AM IST)
t-max-icont-min-icon

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மாஞ்சோலை கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

நெல்லை, 

நெல்லை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் ஷில்பாவிடம், தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர். அதில், நாங்கள் பல வருடங்களாக மாஞ்சோலையில் இருந்து கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறோம். வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறோம். மேலும் எங்களுக்கு சொந்தமாக நிலமோ, வீடோ கிடையாது. நாங்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள். எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நெல்லை அருகே உள்ள அனந்தகிருஷ்ணபுரம் பொதுமக்கள், தங்கள் ஊரில் உள்ள பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றித்தர வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

வீரவநல்லூர் பகுதி மக்கள் பா.ஜ.க. இளைஞர் அணி மண்டல தலைவர் சிவபாலன், மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், தங்களுக்கு அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை அங்குள்ள தனியார் பள்ளி நிர்வாகம் ஆக்கிரமித்து சுவர் கட்டி உள்ளனர். அந்த ஆக்கிரமிப்பை அகற்றி தரவேண்டும் என்று கூறி உள்ளனர்.

வீரகேரளம்புதூர் அருகே உள்ள அச்சங்குன்றம் கிராம மக்கள் மற்றும் இந்து முன்னணியினர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

தங்கள் ஊரில் உள்ள அரசு நிலத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்ட அனுமதிக்கக்கூடாது. அந்த இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர். மானூர் வேளாண்மைத்துறை அலுவலகத்தில் விவசாயிகளுக்கு ஆடு, மாடு வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் மனு கொடுத்தார்.

ராமையன்பட்டியில் உள்ள மயான நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்த ஊர்மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய விவசாயிகள் மகாசபை செயலாளர் சேக்மைதீன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், செங்கோட்டை அருகே வடகரை கீழ்பிடாகையில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்த விவசாயிகளுக்கு உடனே பணம் கொடுப்பதில்லை. எனவே நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்த விவசாயிகளுக்கு உடனே பணம் வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

எம்.எல்.தேரி விவசாயிகள் மேம்பாட்டு சங்கத்தினர், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “திசையன்விளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் பல ஆண்டுகளாக வறட்சியில் சிக்கி தவிக்கிறது. எனவே அந்த பகுதியில் உள்ள குளங்களுக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் விடவேண்டும். இந்த ஆண்டு 3-வது, 4-வது ரீச் குளங்களுக்கு முன்னுரிமை என்பதால் 10-வது மடையின் கடைசி குளம் நிரம்பும் வரை சிறப்பு ஆணையின் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமிரபரணி- கருமேனி, நம்பியாறு இணைப்பு திட்டமான வெள்ளநீர் கால்வாய் திட்டத்தின் 3-வது கட்டப்பணிக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.300 கோடிக்கான வேலைகள் மற்றும் 3-வது கட்ட பணியை நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே தொடங்க வேண்டும். 4-வது கட்டப்பணிகளுக்கு அரசாணை பெறுவதற்கு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

வீரகேரளம்புதூர் தென்னம்பிள்ளை தெருவை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பரசுராமன், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய ஒருவர் மற்றொருவருடன் போனில் பேசும் ஆடியோவை கேட்கும்போது, முதன்மை கல்வி அலுவலகத்தில் கோடி கோடியாக ஊழல்களும், திருட்டு கையெழுத்தினைப்போட்டு மோசடி வேலையும் நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது.

எனவே போலி கையெழுத்து போட்டது யார்? தவறு செய்தவர்கள் யார்? என்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். 


Next Story