திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், போலீஸ் அதிகாரியை கண்டித்து வியாபாரி தீக்குளிக்க முயற்சி


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், போலீஸ் அதிகாரியை கண்டித்து வியாபாரி தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 11 Feb 2019 11:00 PM GMT (Updated: 11 Feb 2019 9:21 PM GMT)

போலீஸ் அதிகாரியை கண்டித்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற வியாபாரியால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதையொட்டி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலையில் இருந்தே பொதுமக்கள் வரத்தொடங்கினர். அவர்கள் கொண்டு வரும் உடைமைகளை கலெக்டர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பரிசோதனை செய்து, கூட்டம் நடக்கும் இடத்துக்கு அனுப்பி வைத்துக்கொண்டிருந்தனர். அப்போது முதியவர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வந்தார். அவருடைய கையில் பிளாஸ்டிக் கேன் இருந்தது.

பின்னர் குடும்பத்தினரை விட்டு விலகிய அவர், கலெக்டர் அலுவலகம் முன்பு வந்து கேனில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த போலீசார் ஓடிச்சென்று அவரை தடுத்தனர். மேலும் அவர் மீது தண்ணீரையும் ஊற்றினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் கூறியதாவது:-

நான் நிலக்கோட்டை தாலுகா செம்பட்டியை அடுத்த பச்சமலையான்கோட்டை பகுதியில் வசிக்கிறேன். எனது பெயர் தங்கவேல் (வயது 65). கடந்த 2003-ம் ஆண்டு செம்பட்டி-பழனி ரோட்டில் ஒருவருக்கு சொந்தமான இடத்தின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கினேன். மற்றொரு பகுதி அவருடைய தம்பிக்கு சொந்தமானது. பின்னர் நான் வாங்கிய இடத்தில் பெட்டிக்கடை அமைத்து பிழைப்பு நடத்தி வந்தேன். இந்த நிலையில், பக்கத்து இடத்தின் உரிமையாளர் எனது இடத்தை ஆக்கிரமித்தார். இதையடுத்து செம்பட்டி போலீசில் நான் புகார் அளித்தேன். அங்குள்ள ஒரு போலீஸ் அதிகாரி, முதலில் எனது ஆவணங்கள் சரியாக உள்ளது, எனவே பயப்பட வேண்டாம் என கூறினார். பின்னர் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் வழக்கை உங்களுக்கு சாதகமாக முடித்து கொடுக்கிறேன் என்றார். எனக்கு அந்த அளவுக்கு வசதியில்லை என தெரிவித்தேன். இதையடுத்து நான் வைத்திருக்கும் ஆவணங்கள் போலியானது என கூறிய அவர், கடையில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து வைத்ததுடன் எனது குடும்பத்தினரையும் தாக்க முயன்றார்.

இதற்கிடையே எனது இடத்தை ஆக்கிரமித்தவர்கள் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்க தொடங்கியுள்ளனர். எனது வாழ்வாதாரத்தை இழந்துவிட்டேன் என்ற மன உளைச்சலில் இருந்த எனக்கு தற்போது பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டதால் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்து உயிரை விட்டுவிட முடிவு செய்தேன். அதன்படியே எனது மகள் மற்றும் குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தீக்குளிக்க முயன்றேன். ஆனால் நீங்கள் (அதாவது போலீசார்) என்னை தடுத்து காப்பாற்றிவிட்டீர்கள்.

எனவே எனது இடத்தை மீட்டுக்கொடுப்பதுடன், எங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீதும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதையடுத்து அவரை சமாதானப்படுத்திய போலீசார் கலெக்டரிடம் மனு அளிக்கும்படியும், கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என கூறியும் அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு வியாபாரி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story