தவசிமடையில் ஜல்லிக்கட்டு, காளைகள் முட்டியதில் 19 வீரர்கள் காயம்


தவசிமடையில் ஜல்லிக்கட்டு, காளைகள் முட்டியதில் 19 வீரர்கள் காயம்
x
தினத்தந்தி 11 Feb 2019 11:00 PM GMT (Updated: 11 Feb 2019 9:26 PM GMT)

திண்டுக்கல் அருகே தவசிமடையில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 19 வீரர்கள் காயம் அடைந்தனர்.

கோபால்பட்டி,

திண்டுக்கல்லை அடுத்த தவசிமடையில் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. திண்டுக்கல் ஆர்.டி.ஓ.ஜீவா ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். 531 காளைகள் போட்டியில் அனுமதிக்கப்பட்டன. காளைகளை கால்நடை டாக்டர்கள் பரிசோதித்து வாடிவாசலுக்கு அனுப்பினர். காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் 405 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு டோக்கன் பெற்றிருந்தனர். இதில் பல்வேறு காரணங்களால் 13 பேர் நிராகரிக்கப்பட்டனர். மீதமிருந்தவர்கள் குழுக்களாக காளைகளை அடக்க களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட காளைகளை மாடுபிடிவீரர்கள் போட்டிபோட்டு பிடித்து பரிசுகளை தட்டிச்சென்றனர். பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் தப்பிச்சென்றன. சில காளைகள் அசராமல் நின்று வீரர்களை மிரட்டி, தன்னை பிடிக்க முயன்றவர்களை முட்டித்தூக்கி எறிந்தது. பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், சிறப்பான மாடுபிடிவீரர்களுக்கும் தங்கக்காசு, வெள்ளிக்காசு, எவர்சில்வர் பாத்திரங்கள், பீரோ, கட்டில் உள்ளிட்டவை பரிசுகளாக வழங்கப்பட்டன.

காளைகள் முட்டியதில் 19 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் மலர்விழி தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் மதுரை மாவட்டம் பாலமேட்டை சேர்ந்த சந்திரன் (வயது 37) என்பவருக்கு இடதுகண்ணில் காயம் ஏற்பட்டது. நத்தம் மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த ராமு (38) என்பவருக்கு கால் முறிந்தது. இவர்கள் திண்டுக் கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டிற்கான ஏற்பாடுகளை தவசிமடை கிராமமக்கள் செய்திருந்தனர். 100-க் கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story