கொடுமுடியில் பொதுமக்களை விரட்டி விரட்டி கொட்டிய மலைத்தேனீக்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 15 பேர் காயம்


கொடுமுடியில் பொதுமக்களை விரட்டி விரட்டி கொட்டிய மலைத்தேனீக்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 15 பேர் காயம்
x
தினத்தந்தி 11 Feb 2019 10:15 PM GMT (Updated: 11 Feb 2019 9:53 PM GMT)

கொடுமுடியில் பொதுமக்களை மலைத்தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டியது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 15 பேர் காயம் அடைந்தனர்.

கொடுமுடி,

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் இருந்து முத்தூர் செல்லும் ரோட்டில் கணபதிபாளையம் பகுதியில் தீயணைப்பு நிலையம் உள்ளது. தீயணைப்பு நிலையத்தை ஒட்டியுள்ள பகுதியில் ஏராளமான முட்புதர்கள் உள்ளன.

இந்த நிலையில் நேற்று காலை திடீரென முட்புதர்கள் உள்ள பகுதியில் இருந்து ஏராளமான மலைத்தேனீக்கள் பறந்து வந்தன. அப்போது அந்த வழியாக வாகனங்கள் மற்றும் நடந்து வருவோர் போவோரை விரட்டி விரட்டி கொட்டியது. இதனால் பொதுமக்கள் பலரும் அலறி அடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இதில் அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த கொடுமுடியை அடுத்த கம்மங்காட்டுக்களத்தை சேர்ந்த தியாகராஜன் (வயது 25), அவருடைய மனைவி கலைவாணி (24), மகன் சதீஸ் (4), சுபிக்ஷா (1) உள்பட மொத்தம் 15 பேர் காயம் அடைந்தனர். இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் 4 பேர் சிகிச்சை பெற்று உடனடியாக வீட்டுக்கு திரும்பினர். மீதம் உள்ள 11 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story