ஆடியோ விவகாரத்தில் கர்நாடக மேல்-சபையில் கடும் அமளி


ஆடியோ விவகாரத்தில் கர்நாடக மேல்-சபையில் கடும் அமளி
x
தினத்தந்தி 11 Feb 2019 11:45 PM GMT (Updated: 11 Feb 2019 10:00 PM GMT)

ஆடியோ விவகாரத்தில் கர்நாடக மேல்-சபையில் நேற்று கடும் அமளி உண்டானது. மேலும் இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட கோரி காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு,

கர்நாடக மேல்-சபை நேற்று காலை 11 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் கூடியது. கூட்டம் தொடங்கியதும் காங்கிரஸ் உறுப்பினர் ஐவான் டிசோசா எழுந்து, “கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா தலைவர் எடியூரப்பா முயற்சி செய்கிறார். அவர் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் கோட்டா சீனிவாசபூஜாரி, முதலில் காங்கிரசார் தான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பேசினார். இதனால் காங்கிரஸ்-பா.ஜனதா உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா உறுப்பினர்கள் எழுந்து நின்று குரலை உயர்த்தி பேசினர். இதனால் சபையில் கடும் அமளி உண்டானது.

இரு கட்சிகளின் உறுப்பினர்களும் கோஷங்களை எழுப்பினர். ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டி பேசினர். இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது. அப்போது மேலவை தலைவர் பிரதாப்சந்திரஷெட்டி தலையிட்டு, இரு கட்சிகளின் உறுப்பினர்களும் போய் இருக்கையில் அமரும்படி கேட்டுக் கொண்டார்.

ஆனால் சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியபடியே இருந்தது. இதையடுத்து மேலவை தலைவர், சபையை 5 நிமிடம் ஒத்திவைத்தார். சபை மீண்டும் கூடியபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள், ஆடியோ விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்த மேலவை தலைவர், இதற்கு முன்கூட்டியே நோட்டீசு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் நோட்டீசு வழங்கவில்லை. அதனால் அமைதியாக இருக்கையில் அமரும்படி கேட்டுக் கொண்டார். கேள்வி நேரத்தை தொடங்க மேலவை தலைவர் அனுமதி வழங்கினார்.

மேலவை தலைவர் காங்கிரஸ் உறுப்பினர் எச்.எம்.ரேவண்ணாவை பார்த்து, கேள்வி நேரம் தொடங்கி இருப்பதால் கேள்வி கேட்கும்படி கூறினார். ஆனால் அவர் கேள்வி கேட்கவில்லை. இதனால் கோபமடைந்த மேலவை தலைவர், நான் சொல்வது உங்களுக்கு புரியவில்லையா? என்று கேட்டார்.

அப்போது பா.ஜனதா உறுப்பினர்கள் மேசையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது காங்கிரஸ் உறுப்பினர் ஐவான் டிசோசா எழுந்து பேசும்போது, “சட்டத்திற்கு எதிராக எடியூரப்பா நடந்து கொண்டுள்ளார். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி செய்கிறார். இதனால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார்.

காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்த ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர்கள், ஆடியோ விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட கோரி மேலவை தலைவரின் பீடத்தை முற்றுகையிட்டு தர்ணா நடத்தினர். காங்கிரசாரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு பா.ஜனதா உறுப்பினர்கள் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் மீண்டும் கூச்சல்-குழப்பம் நிலவியது. இதையடுத்து சபை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

Next Story