நண்பரின் திருமணத்துக்கு வந்த போது பரிதாபம்: கிணற்றுக்குள் விழுந்து பலியான கூலி தொழிலாளியின் உடல் மீட்பு


நண்பரின் திருமணத்துக்கு வந்த போது பரிதாபம்: கிணற்றுக்குள் விழுந்து பலியான கூலி தொழிலாளியின் உடல் மீட்பு
x
தினத்தந்தி 12 Feb 2019 4:15 AM IST (Updated: 12 Feb 2019 3:44 AM IST)
t-max-icont-min-icon

சேவூர் அருகே நண்பரின் திருமணத்துக்கு வந்த போது கிணற்றுக்குள் விழுந்து பலியான கூலி தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டது.

சேவூர்,

சேவூர் வையாபுரி கவுண்டன்புதூரை சேர்ந்தவர் நடராஜ். இவருடைய மகன் கணேசமூர்த்தி(வயது 31). விவசாய கூலி தொழிலாளி. போத்தம்பாளையம் ஊராட்சி தண்ணீர்பந்தல் பாளையத்தை சேர்ந்தவர் பூபாலன். வேன் டிரைவர். கணேசமூர்த்தியும், பூபாலனும் நெருங்கிய நண்பர்கள். பூபாலனின் மற்றொரு நண்பர் அய்யப்பசாமிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கணேசமூர்த்தி தண்ணீர்பந்தல்பாளையத்துக்கு வந்திருந்தார். கடந்த 10–ந்தேதி அதிகாலை 4 மணி அளவில் மணமகன் வீட்டார், கேரள மாநிலம், பாலக்காட்டில் உள்ள மணமகள் வீட்டுக்கு புறப்பட்டு செல்வதற்காக வேனில் ஆயத்தமாகி கொண்டு இருந்தனர். அப்போது கணேசமூர்த்தி இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள அய்யப்பசாமிக்கு சொந்தமான கிணறு அருகே சென்றார். அதிகாலை நேரம் என்பதாலும் இருள் சூழ்ந்து இருந்ததாலும் சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றில் அவர் தவறி விழுந்து விட்டார்.

திடீரென்று கிணற்றில் பொத்தென்று சத்தம் கேட்டதால் திருமண வீட்டுக்கு வேனில் கிளம்பி கொண்டு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கு ஓடி வந்தனர். அப்போது கிணற்றுக்குள் இருந்து கணேசமூர்த்தி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டார்.

இதை பார்த்து உறவினர்கள் அலறினார்கள். 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் 60 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தது. சிறிது நேரத்திலேயே நீரில் மூழ்கி விட்டார். இது குறித்து உடனடியாக அவினாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் தண்ணீர் அதிக அளவு இருந்ததால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் தனியார் போர்வெல் வைத்து இருப்பவரின் உதவியுடன் நீரில் மூழ்கும் கேமராவை கிணற்றுக்குள் போட்டு நீரில் மூழ்கியவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் கேமராவில் எதுவும் பதிவாகவில்லை. இதையடுத்து கொடிவேரி அணையில் பரிசல் ஓட்டுபவர்களும் வந்து கிணற்றில் இறங்கி தேடி பார்த்தனர். மாலை 6 மணி ஆகியும் அவரது உடல் கிடைக்காததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து இரவு முழுவதும் 2 மோட்டார் மூலம் கிணற்றில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் 20 அடியாக தண்ணீர் குறைந்தது. அதன்பிறகு நேற்று காலை 7 மணிக்கு வந்த அவினாசி தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர். காலை 8 மணிக்கு கணேசமூர்த்தியின் உடலை மீட்டனர். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நண்பரின் திருமணத்திற்கு வந்தவர் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story