சிவகாசியில் பட்டாசு தொழிலை பாதுகாக்கக்கோரி தொடர் போராட்டம்


சிவகாசியில் பட்டாசு தொழிலை பாதுகாக்கக்கோரி தொடர் போராட்டம்
x
தினத்தந்தி 11 Feb 2019 11:45 PM GMT (Updated: 11 Feb 2019 10:58 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி உற்பத்தி செய்ய முடியாத காரணத்தால் கடந்த 3 மாதமாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் தொழிலை பாதுகாக்கக்கோரி நேற்று சிவகாசியில் தொடர் போராட்டத்தை தொடங்கினர்.

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் சுப்ரீம் கோர்ட்டின் நிபந்தனைகளை தொடர்ந்து 1070 பட்டாசு ஆலைகள் கடந்த 3 மாதமாக மூடிக்கிடக்கின்றன. இதில் உரிய நடவடிக்கை எடுத்து ஆலையை திறக்க கோரி பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

மத்திய சுற்றுச்சூழல்துறை பட்டாசு தொழிலில் பேரியம் தடையை நீக்க வேண்டும். சரவெடி தயாரிக்க அனுமதிக்க வேண்டும். தமிழக அரசு பட்டாசு தொழிலுக்கு சுற்றுச்சூழல் விதி 3பி-ல் விலக்கு பெற சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மனம் நிறைவேற்ற வேண்டும். வேலை இழந்து தவிக்கும் பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், தொழிலை பாதுகாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசியில் நேற்று பட்டாசு ஆலை அதிபர்கள், தொழிலாளர்கள், பட்டாசு தொழிலில் தொடர்புடையவர்கள் என 2000 பேர் கலந்து கொண்ட தொடர் தர்ணா போராட்டம் தொடங்கியது.

போராட்டத்தின் போது டான்பாமா (தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம்) பொதுச்செயலாளர் மாரியப்பன் பேசியதாவது:-

பட்டாசுக்கு கடந்த 3 ஆண்டுகளாகவே பல பிரச்சினைகள் வந்து கொண்டு இருக்கிறது. இந்த பிரச்சினைக்கு முடிவு வர வேண்டும் என்றால் மத்திய அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அது நடக்காது போல் தெரிகிறது. சுப்ரீம் கோர்ட்டு சில கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். அதற்கு அவர்கள் தயாராக இல்லை. மாநில அரசு சில உதவிகளை நமக்கு செய்தாலும், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தருவோம் என்று கூறியவர்கள் தற்போது தீர்மானம் நிறைவேற்றித் தர அவசியம் இல்லை என்கிறார்கள். இந்த பிரச்சினை குறித்து சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பேசிய சில தலைவர்கள் பட்டாசு தொழிலை பாதுகாக்க சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்கள். ஆனால் அது நடக்கவில்லை.

சுப்ரீம் கோர்ட்டில் நமக்கு நல்ல தீர்ப்பு வர வாய்ப்பு இல்லை. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி சிக்கிரி இன்னும் சில வாரங்களில் ஓய்வு பெற உள்ளார். மொத்தத்தில் தீபாவளி வரை இந்த வழக்கு நடக்க வாய்ப்பு இருக்கிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு போட கூடாது என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.

சி.ஐ.டி.யூ. மாவட்ட நிர்வாகி தேவா பேசியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையின் போது குடும்பத்துக்கு ரூ.1000 என வழங்கிய இந்த அரசு வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் பட்டாசு தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கினால் நிதிநிலைமை ஒன்றும் மோசம் போகாது. மாவட்ட கலெக்டர் பட்டாசு ஆலைகளை திறக்கலாம். 40 சதவீத பட்டாசுகளை தயாரிக்கலாம் என்று கூறுகிறார். ஆனால் இங்குள்ள வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் பட்டாசு ஆலைகளை திறந்து பசுமை வெடிகளை தயாரிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுப்போம் என்கிறது. பட்டாசு ஆலைகளை திறக்க யார் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்பது புரியாமல் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு இளங்கோவன் பேசியதாவது:-

பட்டாசு தொழிலில் ஈடுபட்டுவரும் பலர் வங்கிகளில் கடன் வாங்கி தான் செய்து வருகிறார்கள். கடந்த 3 மாதமாக கடைகள் திறக்கப்பட வில்லை. ஆனால் கடை வாடகை, மின்சார கட்டணம், ஊழியர்களுக்கு சம்பளம் என அனைத்தும் கொடுக்க வேண்டி உள்ளது. ஆனால் வியாபாரம் மட்டும் கிடையாது. வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த சொல்லி வங்கியில் இருந்துநோட்டீஸ் வருகிறது.

வணிகர்கள் பலர் திவாலாகும் நிலையில் உள்ளனர். பட்டாசு தொழில் கைத்தொழில் தான். மேக்இன் இந்தியா திட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு உள்நாட்டில் தயாரிக்கப்படும் பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த பிரச்சினையை பிரதமர் மோடி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவர் மற்றும் சுற்றுச்சூழல் மந்திரி இருவரும் சிவகாசிக்கு வந்து இங்குள்ளவர்களிடம் கேட்டுப்பார்க்க வேண்டும் இந்த போராட்டம் இன்னும் வலுப்பெற வேண்டும். போராட்டம் இன்னும் 2 நாட்கள் நடக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

சட்டசபையில் பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்ட தகவலை பட்டாசு வணிகர் சங்க கூட்டமைப்பு நிர்வாகி இளங்கோவன் ஒலி பெருக்கி மூலம் அறிவித்தார். அப்போது கூட்டத்தில் இருந்த பட்டாசு தொழிலாளர்கள் நிவாரணம் வேண்டாம் வேலை வேண்டும் என்று கோஷம் போட்டனர்.

Next Story