மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா 53 ஆயிரத்து 914 பேருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பட்டம் வழங்கினார்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 27 ஆயிரத்து 913 பெண்கள் உள்பட 53 ஆயிரத்து 914 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.
மதுரை,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 52–வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. பல்கலைக்கழகத்தின் மு.வ.அரங்கில் நடந்த இந்த விழாவில் துணைவேந்தர் கிருஷ்ணன் வரவேற்றார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாணவ– மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அதன்படி, மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரி மாணவ–மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இதில், தன்னாட்சி பெறாத கல்லூரிகளை சேர்ந்த 16 ஆயிரத்து 618 மாணவ– மாணவிகளும், தன்னாட்சி பெற்ற கல்லூரிகளில் இருந்து 19 ஆயிரத்து 322 மாணவ–மாணவிகளும், பல்கலைக்கழகத்தின் துறை மாணவர்கள் 457 பேரும் பட்டங்கள் பெற்றனர். அதேபோல, தொலைநிலைக்கல்வி மூலம் படித்த 17 ஆயிரத்து 517 பேரும் என 53 ஆயிரத்து 914 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இவர்களில் 27 ஆயிரத்து 913 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் 564 பி.எச்டி. முடித்தவர்கள், தங்கப்பதக்கம், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பில் முதலிடம் பெற்றவர்கள் என 70 பேரும் கவர்னரிடம் நேரடியாக பட்டங்களை பெற்றனர். பி.எச்டி. பட்டம் பெற்றவர்களில் 305 பேர் பெண்கள்.
இவர்களில் அறிவியல் துறையில் 122 பெண்களும், கலைப்பிரிவில் 115 பேரும் பட்டம் பெற்றுள்ளனர். பிற மாணவ–மாணவிகள் கல்வி, வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மை துறையை சேர்ந்தவர்கள். பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற 70 மாணவ– மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
பேராசிரியர் குமரகுரு பரிசுக்காக, பல்கலைக்கழகத்தின் கடலியல் உயிரியல் துறையை சேர்ந்த மாணவி ஒருவரின் ஆய்வுக்கட்டுரை சிறந்த ஆய்வுக்கட்டுரையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் கடந்த 2017–ம் ஆண்டு மற்றும் 2018–ம் ஆண்டு மாணவ– மாணவிகள் 54 ஆயிரத்து 548 பேர் பட்டங்கள் பெற்றனர். இந்த பட்டமளிப்பு விழாவில் பார்வையற்ற ஒருவரும் பி.எச்டி. பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில், பதிவாளர் சின்னையா, தேர்வாணையர் ரவி மற்றும் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், தொலைநிலைக்கல்வி இயக்குனர், பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், துணைப்பதிவாளர்கள், உதவி பதிவாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.