கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 4 காங். எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்


கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 4 காங். எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 11 Feb 2019 11:05 PM GMT (Updated: 11 Feb 2019 11:05 PM GMT)

கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் சித்தராமையா மனு கொடுத்தார்.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி உள்பட 4 பேர் காங்கிரசின் தொடர்பில் சிக்கவில்லை. அவர்கள் பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாயின. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களும் கடந்த ஜனவரி மாதம் டெல்லி அருகே உள்ள ஒரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் கூட்டணி அரசுக்கு சிக்கல் எழுந்தது.

இதையடுத்து கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இதில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்றும், தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் ரமேஷ் ஜார்கிகோளி, உமேஷ் ஜாதவ், மகேஷ் கமடள்ளி, நாகேந்திரா ஆகிய 4 பேர் கலந்துகொள்ளவில்லை.

இதையடுத்து அவர்கள் 4 பேருக்கும் விளக்கம் கேட்டு காங்கிரஸ் சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டது. இதற்கு அவர்கள் விளக்கம் அளித்தனர். அந்த பதில் திருப்தி அளிக்கவில்லை என்றும், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மீண்டும் அந்த 4 பேருக்கும் நோட்டீசு அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் நேரில் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த 8-ந் தேதி சித்தராமையா தலைமையில் விதான சவுதாவில் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என்றும், தவறினால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப் பட்டது.

ஆனால் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, உமேஷ் ஜாதவ், மகேஷ் கமடள்ளி மற்றும் நாகேந்திரா ஆகிய 4 பேர் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் தகுதி நீக்கம் செய்வது என்று சட்டசபை காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது.

அதன்படி சபாநாயகர் ரமேஷ்குமாரை பெங்களூரு விதான சவுதாவில் உள்ள அவரது அலுவலகத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தராமையா நேற்று நேரில் சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். அதில் கொறடா உத்தரவை மீறிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, உமேஷ் ஜாதவ், மகேஷ் கமடள்ளி மற்றும் நாகேந்திரா ஆகிய 4 பேரையும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட் டது.

இந்த சந்திப்பின்போது துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story