நாக்பூர் மத்திய சிறையில் மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி திடீர் மரணம் தூக்கு தண்டனை பெற்றவர்


நாக்பூர் மத்திய சிறையில் மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி திடீர் மரணம் தூக்கு தண்டனை பெற்றவர்
x
தினத்தந்தி 12 Feb 2019 3:30 AM IST (Updated: 12 Feb 2019 4:39 AM IST)
t-max-icont-min-icon

மும்பை இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை பெற்று நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த குற்றவாளி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

மும்பை,

மும்பை கேட்வே ஆப் இந்தியா மற்றும் ஜாவேரி பஜார் ஆகிய இரண்டு இடங்களில் கடந்த 2003-ம் ஆண்டு ஆகஸ்டு 25-ந் தேதி குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.

இரண்டு டாக்சிகளில் வைக்கப்பட்டு இருந்த சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்து சிதறியதில் 52 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 260 பேர் படுகாயம் அடைந்தனர்.

மும்பையை உலுக்கிய இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முகமது ஹனிப் சையது, அவரது மனைவி பெமிடா மற்றும் அஷ்ரத் அன்சாரி ஆகிய 3 பேருக்கு மும்பை பொடா சிறப்பு கோர்ட்டு கடந்த 2009-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

தீர்ப்புக்கு பின்னர் முகமது ஹனிப் சையது நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அண்மையில் சிறையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை அவரது உடல் நிலைமை மோசமானது. உடனடியாக சிறை அதிகாரிகள் அவரை சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் அவரது உடல் நிலையை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

இந்த நிலையில் அவர் திடீரென மரணம் அடைந்தார். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 1½ மணி நேரத்திலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முகமது ஹனிப் சையது உயிரிழந்தது பற்றி மும்பையில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் நாக்பூர் சென்றனர்.

முதல்கட்ட தகவலின் அடிப்படையில் முகமது ஹனிப் சையது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என கருதுவதாக நாக்பூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் ராணி போஸ்லே தெரிவித்தார். இருப்பினும் அவரது மரணத்துக்கான உண்மையான காரணம் பிரேத பரிசோதனையின் மூலம் தான் உறுதியாக தெரியவரும் என்றார்.

Next Story