பெங்களூருவில், ஓட்டலில் தங்கியிருந்த போது சம்பவம் தாயின் தோழியை கற்பழிக்க முயற்சி


பெங்களூருவில், ஓட்டலில் தங்கியிருந்த போது சம்பவம் தாயின் தோழியை கற்பழிக்க முயற்சி
x
தினத்தந்தி 11 Feb 2019 10:30 PM GMT (Updated: 11 Feb 2019 11:16 PM GMT)

பெங்களூருவில் ஓட்டலில் தங்கியிருந்த போது தாயின் தோழியை கற்பழிக்க முயன்ற கொல்கத்தா தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் வனிதா (வயது 39, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வனிதாவுடன், 42 வயது பெண்ணும் அதே நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஒரே நிறுவனத்தில் வனிதாவும், அந்த பெண்ணும் வேலை செய்ததால் தோழிகளாக பழகி வந்தனர். அந்த பெண்ணுக்கு முகர்ஜி (22) என்ற மகன் உள்ளான். அவர், கொல்கத்தாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறார்.

இ்தற்கிடையில், வனிதா வேலை செய்யும் நிறுவனம் பெங்களூருவில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கொல்கத்தாவில் இருந்து வனிதாவும், அவரது தோழியான முகர்ஜியின் தாயும் பெங்களூருவுக்கு வந்திருந்தனர். தனது தாய்க்கு துணையாக முகர்ஜியும் பெங்களூருவுக்கு வந்திருந்தார். பின்னர் அவர்கள் 3 பேரும் யஷ்வந்தபுரம் அருகே கொரகுன்டே பாளையாவில் உள்ள ஒரு ஓட்டலில் அறைகள் எடுத்து தங்கி இருந்தனர்.

இந்த நிலையில், வனிதா தங்கி இருந்த அறைக்கு முகர்ஜிக்கு சென்றார். அங்கு வைத்து வனிதாவிடம் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று முகர்ஜி கேட்டுள்ளார். உடனே அவரும் தண்ணீர் கொடுத்துள்ளார். அப்போது திடீரென்று வனிதாவை முகர்ஜி கற்பழிக்க முயன்றதாக தெரிகிறது. உடனே அவரிடம் இருந்து தப்பிக்க வனிதா முயன்றுள்ளார்.

ஆனால் அவரை விடாமல் முகர்ஜி கற்பழிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் வனிதா சத்தம் போட்டு கூச்சலிட்டார். உடனே ஆத்திரமடைந்த முகர்ஜி, வனிதாவை குளியலறைக்குள் இழுத்து சென்று தாக்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து ஆர்.எம்.சி.யார்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து முகர்ஜியை கைது செய்தனர். விசாரணையில், அவர் குடிபோதையில் தனது தாயின் தோழியை கற்பழிக்க முயன்றது தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story