மோட்டார் சைக்கிள்கள் மோதல், என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேர் பலி
ஆண்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேர் பலியாகினர்.
கண்டமனூர்,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராஜதானியை சேர்ந்தவர் முருகன் மகன் ஹரிஷ் (வயது 22). முருகன் முறுக்கு வியாபாரம் செய்து வருகிறார். ஹரிஷ் ஐ.டி.ஐ. முடித்துவிட்டு, தந்தையின் வியாபாரத்திற்கு உதவி வந்தார். அதே பகுதியை சேர்ந்த முருகனின் உறவினர் கணேசனின் மகன் அஜய் (12). அந்த பகுதியில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.
நேற்று முன்தினம் இரவு ஹரிஷ், அஜய் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஆண்டிப்பட்டியில் இருந்து கொத்தப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆண்டிப்பட்டி-பாலகோம்பை சாலையில் பிச்சம்பட்டி என்னுமிடத்தில் வந்தபோது எதிரில் கொத்தப்பட்டியை சேர்ந்த ராஜகோபால் மகன் நரேஷ்பாண்டி (23), ஆண்டிப்பட்டி அருகேயுள்ள வரதராஜபுரத்தை சேர்ந்த சக்திவேல் மகன் மனோஜ் (22), கருப்பையா மகன் முகிலன் (23) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள், ஹரிஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் படுகாயமடைந்த ஹரிஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் படுகாயமடைந்த நரேஷ்பாண்டி, மனோஜ், முகிலன், அஜய் ஆகியோரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நரேஷ்பாண்டி இறந்தார். மனோஜ் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதில் மேல்சிகிச்சைக்காக முகிலன், அஜய் ஆகியோர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் இறந்த நரேஷ்பாண்டி சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். அவரை சென்னைக்கு வழியனுப்புவதற்காக நண்பர்களான முகிலன், மனோஜ் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்றதும் தெரியவந்தது. விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story