குப்பைகளுக்கு வைத்த தீயில் வீடு எரிந்தது சிலிண்டர் வெடித்ததில் தம்பதி உடல் கருகி சாவு


குப்பைகளுக்கு வைத்த தீயில் வீடு எரிந்தது சிலிண்டர் வெடித்ததில் தம்பதி உடல் கருகி சாவு
x
தினத்தந்தி 13 Feb 2019 5:00 AM IST (Updated: 12 Feb 2019 11:26 PM IST)
t-max-icont-min-icon

குப்பைகளுக்கு வைத்த தீ வீட்டுக்கு பரவியதில் சிலிண்டர் வெடித்து தம்பதி உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பொள்ளாச்சி, 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ராசக்காபாளையம் திருமலை கார்டன் பகுதியை சேர்ந்தவர் சண்முகவடிவேல் (வயது 80). இவர் கோட்டூர் ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது மனைவி கிருஷ்ணவேணி (65), மகன் சக்தி சரவணன் (42), மருமகள் காயத்ரி, மகள் லட்சுமி தேவி ஆகியோருடன் வசித்து வந்தார்.

சிவில் என்ஜினீயரான சக்தி சரவணனுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் சக்தி சரவணன் தனது மனைவியுடன் அமராவதியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று விட்டார்.

சண்முகவடிவேல், அவரது மனைவி கிருஷ்ணவேணி, மகள் லட்சுமி தேவி ஆகியோர் நேற்று மதியம் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீட்டை சுற்றி இருந்த குப்பை மேடு தீப்பிடித்து எரிந்துள்ளது. அந்த தீ மளமளவென பரவி அங்குள்ள காய்ந்த புற்களிலும் பற்றி எரிந்து, சண்முகவடிவேலின் வீட்டிலும் தீப்பிடித்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த லட்சுமி தேவி சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டனர். இதற்கிடையில் தீ வேகமாக பரவி வீடு முழுவதும் கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் சண்முகவடிவேல், கிருஷ்ணவேணி ஆகியோரால் உடனடியாக வெளியே வர முடியவில்லை.

இதற்கிடையில் தீயின் வெப்பம் காரணமாக வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் வீடு தரைமட்டமானது. வீட்டுக்குள் இருந்த சண்முகவடிவேல், கிருஷ்ணவேணி ஆகியோர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். சிலிண்டர் வெடித்து சிதறியதில் பக்கத்து வீட்டின் ஜன்னல் சேதமடைந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில் பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் மகாலிங்கபுரம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள், பிணமாக கிடந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கியாஸ் சிலிண்டர் வெடித்து தம்பதி பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சண்முகவடிவேலுக்கு கண் பார்வை தெரியாது. அவரது மனைவி கிருஷ்ணவேணி நடக்க முடியாமல் வீட்டில் இருந்துள்ளார். லட்சுமிதேவிக்கு மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதால், அவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் சக்தி சரவணன், திருமலை கார்டன் பகுதியில் வீடு கட்டுவதற்கு இடம் வாங்கி உள்ளார். அதில் தற்காலிகமாக ஓலை வேய்ந்தும், ஓடுகளால் மேற்கூரை அமைத்தும் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் காய்ந்த புற்கள் மற்றும் குப்பைகள் மீது பிடித்த தீ பரவி சண்முகவடிவேலின் வீடு எரிந்துள்ளது. கிருஷ்ணவேணியால் எழுந்து செல்ல முடியாததால் படுக்கையிலேயே தீயில் கருகி இறந்தார். சண்முகவடிவேல் மீது ஓடுகள் மேலே விழுந்ததில் அவரால் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. இதனால் அவரும் தீயில் கருகி இறந்துள்ளார்.

இந்த விபத்தில் வீட்டில் வைத்திருந்த சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள், மோட்டார் சைக்கிள் உள்பட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. வீட்டில் இருந்த ஒரு சிலிண்டர் மட்டும் வெடித்து சிதறி உள்ளது. மற்றொரு சிலிண்டர் வெடிக்கவில்லை.

காய்ந்த புற்கள் மற்றும் குப்பைகளுக்கு யாரும் தீ வைத்தார்களா? அல்லது வெயில் காரணமாக தீப்பிடித்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story