சிக்கராயபுரம் கல்குவாரியில் தண்ணீர் எடுப்பதற்கான பணிகள் தீவிரம் கோடையில் சென்னை மாநகரின் தாகம் தீர்க்க நடவடிக்கை


சிக்கராயபுரம் கல்குவாரியில் தண்ணீர் எடுப்பதற்கான பணிகள் தீவிரம் கோடையில் சென்னை மாநகரின் தாகம் தீர்க்க நடவடிக்கை
x
தினத்தந்தி 13 Feb 2019 4:45 AM IST (Updated: 13 Feb 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகரில் கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, அமெரிக்காவில் இருந்து நவீன ராட்சத மிதவை எந்திரம் கொண்டுவரப்பட்டு போரூர் அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சென்னை, 

சென்னை, மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் 25 கல்குவாரிகள் உள்ளன. செம்பரம்பாக்கம் நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் கல்குவாரிகளின் அருகில் பெய்யும் மழை நீர் அப்பகுதியில் உள்ள கால்வாய்கள் மூலம் கல்குவாரிகளுக்கு வந்து தேங்கி கிடக்கிறது. கடந்த காலங்களில் இதனை எவரும் பயன்படுத்துவது கிடையாது. அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் அதில் இறங்கி குளிப்பதும், இதனால் உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர்கதையாகி வந்தது. இதனை தடுக்க தேங்கி கிடக்கும் தண்ணீரை முறையாக பயன்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் போதிய மழையின்மையால் கடந்த சில ஆண்டுகளாக கோடைக்காலங்களில் சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த 2017-ம் ஆண்டு கோடைக்காலத்தில் குடிநீர் தேவைக்காக சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தப்பட்டது. இதற்காக முறையாக கல்குவாரியின் அடியில் இருந்து மாதிரி தண்ணீர் எடுத்து விஷத்தன்மை இருக்கிறதா? குடிநீருக்கு பயன்படுத்த உகந்ததா? என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. சாதகமான முடிவு வந்ததால் தொடர்ந்து கல்குவாரி தண்ணீர் குடிநீருக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியில் 157 மில்லியன் கன அடி, சோழவரத்தில் 48, புழல் 641, செம்பரம்பாக்கம் 39 உள்பட 885 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 4 ஏரிகளிலும் 4.9 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது. இருந்தும் கடந்த ஆண்டு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு பரவலாக காணப்பட்டது. ஆனால் தற்போது 1 டி.எம்.சி.க்கும் குறைவாகவே தண்ணீர் இருக்கிறது. எனவே வரும் கோடையில் சென்னை மாநகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி வருகிறது.

இதனால் மாற்று ஏற்பாடாக சென்னை குடிநீர் வாரியம், சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் உள்ள தண்ணீரை எடுத்து பயன்படுத்த போர்க்கால அடிப்படையில் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இதுகுறித்து சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் தண்ணீர் எடுப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ள பி.எப்.எஸ். டெக்னாலஜி நிறுவன நிர்வாக இயக்குனர் பூவன் கூறியதாவது:-

சென்னை மாநகரில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடந்த ஆண்டு கோடைக்காலத்தில் சிக்கராயபுரத்தில் உள்ள 5 கல்குவாரிகளில் இருந்து தினசரி 30 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுத்து பயன்படுத்தப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் இப்பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்துவதற்கான பணிகள் கடந்த 2 வாரமாக இரவு பகலாக நடந்து வருகிறது. இதற்காக அமெரிக்காவில் இருந்து 10 டன் எடை கொண்ட நவீன ராட்சத மிதவை எந்திரம் கொண்டுவரப்பட்டு உள்ளது. இதில் ராட்சத மின்மோட்டார் பொருத்தப்பட்டு, கல்குவாரியில் மிதக்க விடப்பட உள்ளது.

இந்த மின்மோட்டாருக்கு தேவையான மின்சாரம் கல்குவாரியின் அருகில் அமைக்கப்பட்டுள்ள 1,010 கிலோ வாட் திறன் கொண்ட மின்நிலையத்தில் இருந்து வினியோகம் செய்யப்பட உள்ளது. கல்குவாரியில் இருக்கும் தண்ணீர் மின்மோட்டார்கள் மூலம் பம்பு செய்யப்பட்டு, இரும்பு குழாய்கள் மூலம் 4.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு அனுப்பப்பட உள்ளது.

இதற்காக எச்.டி., டி.ஏ. என இரண்டு வகையான குழாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கல்குவாரியின் மீது வளைவு நெளிவுகள் இருப்பதால் அதற்கேற்ப எச்.டி குழாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப குழாய்கள் வளைவு நெளிவுகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் டி.ஏ என்ற குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த குழாய்கள் அசையாமல் இருக்க குழாயின் இரண்டு பகுதிகளில் இரும்பு கம்பி வைக்கப்பட்டு கீழ்ப்பகுதியில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கல்குவாரியில் ஏற்கனவே பொருத்தப்பட்டு இருந்த குழாய்களின் இணைப்புகளில் பல்வேறு இடங்கள் உடைக்கப்பட்டும், சேதமடைந்தும் இருப்பதால் அதனை மீண்டும் சரி செய்யும் பனி தற்போது தொடங்கி உள்ளது. இதற்கான பணிகள் 75 சதவீதம் முடிவடைந்து விட்டது. அடுத்த வாரம் மிதவை எந்திரத்தை ராட்சத கிரைன் மூலம் கல்குவாரியில் இறக்கி தண்ணீர் எடுக்க திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
சிக்கராயபுரத்தில் உள்ள 8 மற்றும் 19 எண் கொண்ட கல்குவாரிகளில் கடந்த ஆண்டை விட தற்போது கூடுதலாக தண்ணீர் உள்ளது. குறிப்பாக 200 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இதில் 150 மில்லியன் கன அடி தண்ணீரை நாள் ஒன்றுக்கு 30 மில்லியன் லிட்டர் வீதம் 150 நாட்களுக்கு எடுக்க திட்டமிட்டு உள்ளோம்.

தற்போது கிருஷ்ணா நதிநீர் ஆந்திர மாநிலம் அளித்து வருகிறது. இதன் மூலம் ஓரளவு நிலைமை சமாளிக்கப்படும். மார்ச் மாதம் இறுதியில் தேவை அதிகரிக்கும் போது கல்குவாரியில் உள்ள தண்ணீரை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. எந்த நேரமும் தண்ணீர் எடுக்கும் வகையில் எந்திரங்கள் தயார் நிலையில் வைக்க உள்ளோம்.

சிக்கராயபுரத்தில் 25 கல்குவாரிகள் உள்ளன. இவற்றில் மழை நீர் உள்ளது. இவற்றை முறையாக பயன்படுத்துவதற்காக திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. தற்போது தமிழக அரசு வறட்சியை சமாளிப்பதற்காக ரூ.11 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இந்த திட் டம் மூலம் கல்குவாரியை இணைக்க திட்டமிட்டு உள்ளோம். பரந்து விரிந்து கிடக்கும் ஏரிகளில் உள்ள தண்ணீர் விரைவாக ஆவியாவதுடன், பூமியும் உறிஞ்சிவிடுகிறது.

எனவே ஏரி தண்ணீரை முதலில் பயன்படுத்த முடிவு செய்து உள்ளோம். ஆனால் கல்குவாரியில் உள்ள தண்ணீர் பாத்திரத்தில் வைத்திருக்கும் தண்ணீர் போன்றது. ஆவியாவது குறைவு. அதே நேரம் பூமி உறிஞ்ச வாய்ப்பு இல்லை. மாத கணக்கில் சேமித்து வைக்க முடியும். இதனால் வரும் காலங்களில் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்வதற்காக 25 கல்குவாரிகளையும் இணைத்து ஒரே கல்குவாரியாக ராட்சத அளவில் அமைக்க திட்டமிட்டு உள்ளோம். தற்போது கல்குவாரிகளில் தண்ணீர் அதிகம் இருப்பதால் கோடை முழுவதும் இந்த தண்ணீரை எடுத்து பயன்படுத்தி விட்டு, அதற்கு பிறகு கல்குவாரிகளை இணைத்து ஒரே நீர்தேக்கமாக செயல்படுத்த இருக்கிறோம். கடந்த ஆண்டு சோதனை அடிப்படையில் 2 கல்குவாரிகள் இணைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story