சத்தியமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தாய்– மகள் சாவு


சத்தியமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தாய்– மகள் சாவு
x
தினத்தந்தி 13 Feb 2019 4:15 AM IST (Updated: 13 Feb 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தாய், மகள் பரிதாபமாக இறந்தனர். வாலிபர் படுகாயம் அடைந்தார்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னக்கண்ணான். இவருடைய மனைவி பார்வதி (வயது 65). இவர்களுக்கு பண்ணாரி (38) என்ற மகளும், ஜோதி (35) என்ற மகனும் உள்ளனர். சின்னக்கண்ணான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மேலும் பண்ணாரி திருமணம் செய்த பின்னர் கணவரை பிரிந்து தாய்– தம்பியுடன் வசித்து வந்தார். ஜோதி கூலி வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பார்வதி, பண்ணாரி மற்றும் ஜோதி ஆகிய 3 பேரும் சத்தியமங்கலம் அருகே உள்ள அத்தாணி ரோட்டில் எம்.ஜி.ஆர். நகர் பிரிவில் நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர்கள் 3 பேர் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட 3 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பார்வதி மற்றும் பண்ணாரி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

ஜோதிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டிய டிரைவரை தேடி வருகிறார்கள்.


Next Story