பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் செவிலியர் கல்லூரி சார்பில் பால்வினை நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி


பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் செவிலியர் கல்லூரி சார்பில் பால்வினை நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 12 Feb 2019 10:00 PM GMT (Updated: 12 Feb 2019 7:20 PM GMT)

தூத்துக்குடியில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் செவிலியர் கல்லூரி சார்பில் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் செவிலியர் கல்லூரி சார்பில் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் செவிலியர் கல்லூரி மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று நடந்தது. கல்லூரி துணை பேராசிரியர் சுமதி வரவேற்று பேசினார்.

அரசு ஆஸ்பத்திரி தலைமை மகப்பேறு டாக்டர் மெர்சி ரொட்ரிகோ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘பால்வினை நோய் கிருமி தொற்று காரணமாக கருவுற்ற தாய்க்கு கருச்சிதைவு, அதிக ரத்தப்போக்கு, ரத்த சோகை மற்றும் குறைமாத பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் தாய்மார்கள் முறையான மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக தாய்மார்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.

தாய்மார்களுக்கு பரிசு

மாணவிகள் ஆறுமுகம், தமிழ்மதி, திவ்யா, ஐஸ்வர்யாதேவி, சீதாலட்சுமி ஆகியோர் கணினி மூலம் பால்வினை நோய் குறித்து விளக்கம் அளித்தனர்.

தொடர்ந்து தாய்மார்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, சிறப்பாக பதில் அளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இரண்டாம் நிலை செவிலியர் கண்காணிப்பாளர் அமுதாராணி பரிசுகளை வழங்கினார்.

முதல்நிலை செவிலியர் கண்காணிப்பாளர் ஜமுனா மற்றும் செவிலியர்கள், தாய்மார்கள், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். களப்பயிற்சி ஆசிரியை ஸ்ரீபிரியா நன்றி கூறினார். களப்பயிற்சி ஆசிரியைகள் சண்முகப்பிரியா, ஜினோசினி ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

Next Story