கிருஷ்ணகிரி அரசு பள்ளியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி கலெக்டர் பார்வையிட்டார்
கிருஷ்ணகிரி அரசு பள்ளியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை கலெக்டர் பிரபாகர் பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியினை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்து, பார்வையிட்டார். மாவட்ட முதன்மை கல்வி அலுவவர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் மற்றும் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையினர் இந்தியா முழுவதும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்காக புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 6, 7, 8 ஆகிய வகுப்பில் படிக்கும், அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவரை பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
அதன்படி 2018-19-ம் ஆண்டிற்கான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 62 மாணவர்களுக்கும் புதுடெல்லி மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் தலா ரூ.10 ஆயிரம் வீதம் விருதுகள் வழங்கி ஊக்குவித்துள்ளது. மாணவர்களின் அறிவியல் திறன் மற்றும் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த “இன்ஸ்பயர்” அறிவியல் கண்காட்சி நடந்து வருகிறது.
இந்த கண்காட்சியில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு பரிந்துரை செய்யப்படுவர். மாநில அளவிலான சிறந்த படைப்புகளை கொண்டு கண்காட்சியில் வெற்றி பெறும் மாணவர்களை புதுடெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்த கண்காட்சியில் சோலார் மின்சார உற்பத்தி, நவீன வேளாண்மை, மூலிகை தாவரம், இயற்கை விவசாயம் உள்ளிட்ட அறிவியல் படைப்புகளை மாணவர்கள் காட்சிக்கு வைத்திருந்தனர்.
எனவே, மாணவர்கள் தங்கள் தனித்திறனை வெளிப்படுத்தி, மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் கண்காட்சியில் தங்களின் படைப்புகளை வைத்து, பரிசுகளை பெற்று மாவட்டத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த அறிவியல் கண்காட்சியில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி பரிசு மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினார். இதில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் நடராஜன், அனைவருக்கும் கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் சூசைநாதன், நாராயணன், வட்டார கல்வி அலுவலர்கள் பெலிசிடாமேரி, கிருஷ்ணதேஜஸ், கிருஷ்ணசாமி, சம்பத், சுப்பிரமணி, செல்வராஜ், பத்மபாரதி, மரியரோஸ், கல்வி ஆய்வாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story