லாரி மீது மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து: என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி
சேலத்தில் லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் என்ஜினீயர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
சூரமங்கலம்,
சேலம் ராமகிருஷ்ணாபார்க் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவருடைய மகன் பிரதியூனா (வயது 18). இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். வீட்டில் இருந்து தினமும் பஸ்சில் பள்ளிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் மாணவர் பிரதியூனா டியூசன் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சேலம் ஜங்ஷன் மெயின் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
இவருக்கு பின்னால் ஈரோடு மாவட்டம் கோரிபாளையம் நேதாஜி நகரை சேர்ந்த குணசேகரன் மகன் லட்சுமணன் (24) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். இவர் என்ஜினீயர் ஆவார். சேலத்தில் உள்ள உறவினர் ஒருவரின் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு முன்பு இரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.
சுப்பிரமணிய நகர் பிரிவு அருகே சென்ற போது லாரியை டிரைவர் திடீரென்று வலது பக்கமாக திருப்பி உள்ளார். அப்போது பிரதியூனா, லட்சுமணன் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள்கள் லாரியின் பின்னால் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். விபத்தில் பலத்த காயம் அடைந்த பிரதியூனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த லட்சுமணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே லட்சுமணன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story