வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு செல்லும் போது சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் கலெக்டரிடம், வக்கீல்கள் மனு
வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு செல்லும் போது சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டரிடம், வக்கீல்கள் மனு கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் வக்கீல் சங்க நிர்வாகிகள் அசோக் ஆனந்தன், இளங்கோ, செந்தில், சிவசங்கர், கதிரவன் தலைமையில் வக்கீல்கள் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டர் பிரபாகரை சந்தித்து கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
நீதிமன்றங்களில் வக்கீல்களுக்கென தனியாக கட்டிடம் கட்டித் தர வேண்டும். அங்கு நூலகம், இணையதள வசதியுடன் கூடிய இ-நூலகம், சுகாதாரமான கழிவறை, குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பட்ஜெட் கூட்டத்தொடரில் வக்கீல்கள் நலனுக்காக ரூ. 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வக்கீல்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு ஏற்படுத்தி தர வேண்டும். இளம் வக்கீல்களுக்கு 5 வருடங்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்க வேண்டும். வீட்டுவசதி வாரியம் மூலம் சலுகை விலையில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
நீதிமன்ற வழக்குகளுக்காக கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் நீதிமன்றங்களுக்கு செல்லக்கூடிய வக்கீல்களின் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே கிருஷ்ணகிரி, தொப்பூர், ஓமலூர் சுங்கச்சாவடிகளில் வக்கீல்களின் வாகனங்களுக்கு கட்டணவிலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story