சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்துக்கு கருப்பு கொடியுடன் ஊர்வலமாக வந்த விவசாயிகள்
சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்துக்கு கருப்பு கொடியுடன் ஊர்வலமாக வந்த விவசாயிகள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
சேத்துப்பட்டு,
சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு நில எடுப்பு ஆட்சேபனை மனுக்கள் மீதான விசாரணைக்கு 12 கிராமத்தில் இருந்து விவசாயிகள் வந்தனர். தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) வெற்றிவேல் தலைமை தாங்கினார். நில எடுப்பு பிரிவு தாசில்தார்கள் பாஸ்கரன் (செய்யாறு), திருமலை (சேத்துப்பட்டு) மற்றும் 20 வருவாய் ஆய்வாளர்கள் அல்லியந்தல், தெள்ளாரம்பட்டு, நமத்தோடு, அனாதிமங்கலம், செம்மாம்பாடி, அப்போடு, உலகம்பட்டு, கொத்தந்தவாடி, கொளக்கரவாடி, தச்சாம்பாடி, ஆத்துரை, பெரணம்பாக்கம் ஆகிய ஊர்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மேலும் சேத்துப்பட்டு 4 வழிச்சாலையில் இருந்து விவசாயிகள் ஒரு குழுவினர் கருப்பு கொடி மற்றும் பதாகைகளுடன் எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலமாக வந்தனர். தாலுகா அலுவலகம் வரும்போது அவர்களை சேத்துப்பட்டு போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஆட்சேபனை மனு உள்ளவர்கள் மட்டும் உள்ளே செல்ல வேண்டும் என்று வருவாய்த்துறையினர் கூறினர்.
அதற்கு ஆட்சேபனை மனுவில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளது. அதனால் எங்களுடன் எல்லோரும் வர அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஊர்வலமாக வந்த விவசாயிகள் தாலுகா அலுவலகத்தின் நுழைவுவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தனி மாவட்ட வருவாய் அலுவலர் வெற்றிவேல், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை திருவண்ணாமலையில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் வந்து பேச சொல்லுங்கள் என்றார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story