தரம்குறைந்த துணிகளால் ஆன ஆடைகளால் வர்த்தகர்களிடம் பணத்தை பெறுவதில் சிக்கல் சங்கங்களுக்கு அறிக்கை அனுப்ப ஆர்பிட்ரேசன் கவுன்சில் முடிவு


தரம்குறைந்த துணிகளால் ஆன ஆடைகளால் வர்த்தகர்களிடம் பணத்தை பெறுவதில் சிக்கல் சங்கங்களுக்கு அறிக்கை அனுப்ப ஆர்பிட்ரேசன் கவுன்சில் முடிவு
x
தினத்தந்தி 12 Feb 2019 10:45 PM GMT (Updated: 12 Feb 2019 8:42 PM GMT)

தரம் குறைந்த துணிகளால் ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டு, வர்த்தகர்களுடன் பிரச்சினை ஏற்பட்டால் பணத்தை பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே இதுதொடர்பாக சங்கங்களுக்கு அறிக்கை அனுப்ப ஆர்பிட்ரேசன் கவுன்சில் முடிவு செய்துள்ளது.

திருப்பூர்,

திருப்பூரில் உள்ள தொழில்துறையினர் உலகளாவிய வர்த்தகர்களுடன் தொடர்பில் இருந்து வர்த்தகத்தில் ஈடுபடுகிறார்கள். மேலும், பலர் உள்நாட்டில் வர்த்தகத்தில் ஈடுபடுகிறார்கள். நம்பிக்கையின் அடிப்படையில் பின்னலாடை வர்த்தகம் நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது. தொழில்துறையினர் ஆடைகளை அனுப்பிய பிறகே இதற்கான பணம் வழங்கப்படுகிறது.

ஆனால் சில போலி வர்த்தகர்கள் ஆடைகளை பெற்று விட்டு, அதற்கான பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி விடுகிறார்கள். மேலும், சிலர் ஆடைகளின் தரம் சரியாக இல்லை என்பது உள்பட காரணங்களை கூறி பணத்தை குறைத்து வழங்கி வருகிறார்கள். இதனால் தொழில்துறையினர் பாதிக்கப்படுகிறார்கள். இதுதொடர்பாக புகார்கள் கொடுத்தால், ஆர்பிட்ரேசன் கவுன்சில் மூலம் பணத்தை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஆர்பிட்ரேசன் கவுன்சில் தலைவர் கருணாநிதி கூறியதாவது:–

ஆர்பிட்ரேசன் கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள சங்க தொழில்துறையினருக்கு வர்த்தகத்தில் பணம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டால், ஆர்பிட்ரேசன் கவுன்சிலுக்கு புகார் கொடுக்கிறார்கள். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து பணத்தை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆர்பிட்ரேசன் கவுன்சிலுக்கு சில புகார்கள் வந்தது. இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தினோம்.

அப்போது எதிர் தரப்பு வர்த்தகர்களிடம் நடத்திய விசாரணையில் பெரும்பாலான நிறுவனங்கள் சார்பில் அனுப்பிய ஆடைகள் தரம் குறைவான துணிகளால் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது. எனவே ஏற்றுமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு ஆடை தயாரிப்பாளர்கள் தங்களது நிறுவனங்களின் ஆடைகள் தயாரித்து அனுப்பப்படும் போது அதனை கவனிக்க வேண்டும். புகார் தெரிவித்த நிறுவனங்கள் மூலம் தரமில்லாத ஆடைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை நிறுவன உரிமையாளர்கள் கவனிக்க தவறியதால் வர்த்தகர்களிடம் பணத்தை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே ஆடைகள் அனுப்பி வைக்கப்படும் முன்பு அதனை உரிமையாளர்களும் கவனிக்க வேண்டும். இதுதொடர்பாக உறுப்பின சங்கங்களுக்கு விழிப்புணர்வுடன் இருக்க அறிக்கை அனுப்பவும் முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story