சொத்துவரி, குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


சொத்துவரி, குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 13 Feb 2019 4:30 AM IST (Updated: 13 Feb 2019 2:12 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளகோவில் நகராட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டண உயர்வைக்கண்டித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

வெள்ளகோவில்,

வெள்ளகோவிலில் தாராபுரம் சாலையிலுள்ள தீர்த்தாம்பாளையம், சிவநாதபுரம், சேரன் நகர், புதுக்காடு பகுதியைச்சேர்ந்த 150–க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் திடீரென வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் திரண்டனர். நகராட்சி ஆணையரைச்சந்தித்து மனு கொடுக்க வந்ததாக அவர்கள் கூறினார்கள். ஆனால் அலுவலகத்தில் ஆணையர் இல்லாததால் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:–

வெள்ளகோவில் நகராட்சி தன்னிச்சையாக மிக அதிகளவில் வரியினங்களை உயர்த்தி உள்ளது. அருகிலுள்ள கரூர், ஈரோடு மாநகராட்சிகள், காங்கேயம் நகராட்சியை விட இங்கு வரிவிதிப்பு அதிகமாக உள்ளது. உதாரணமாக கடந்த 10 வருடங்களுக்கு முன்பு 50 ரூபாயாக இருந்த சொத்து வரி, 2015–ம் ஆண்டில் 320 ரூபாய், 2018 – 19 –ல் 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல 2017–ல், 780 ரூபாயாக இருந்த ஒரு ஆண்டுக்கான குடிநீர் கட்டணம், தற்போது 1,836 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவே மாநகராட்சிகளில் கூட பாதி அளவாகத்தான் உள்ளது. இந்த சொத்து வரி, குடிநீர் கட்டண உயர்வு குறித்து முறைப்படி ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாததால் பலர் 2018–19–ம் ஆண்டுக்கான தங்களுடைய கட்டணங்களை பழைய கட்டண விதிமுறைப்படி கட்டிவிட்டனர்.

இந்த நிலையில் தற்போது கட்டணம் கட்டியவர்கள், கட்டாதவர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தொழில்கள் மிகவும் மந்தமாக இருக்கும் நிலையில் கூடுதல் கட்டணங்களைச்செலுத்த முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே உயர்த்தப்பட்ட கட்டணங்களை பழைய முறைப்படி குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story