பள்ளிபாளையத்தில் அம்மா உடற்பயிற்சி கூடம்-பூங்கா அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்


பள்ளிபாளையத்தில் அம்மா உடற்பயிற்சி கூடம்-பூங்கா அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 13 Feb 2019 3:30 AM IST (Updated: 13 Feb 2019 2:18 AM IST)
t-max-icont-min-icon

மோகனூர் அருகே அணியாபுரம் ஊராட்சியில் அம்மா உடற்பயிற்சி கூடம் மற்றும் பூங்காவை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.

மோகனூர்,

மோகனூர் ஒன்றியத்திற்குட்பட்ட அணியாபுரம் ஊராட்சி பகுதிகளில் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட அம்மா உடற்பயிற்சி கூடம் மற்றும் அம்மா பூங்காவை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதுதவிர, ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட அணியாபுரம் ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடம், ரூ.17 லட்சத்தில் கட்டப்பட்ட கிராம ஊராட்சி சேவைமைய கட்டிடம், ரூ.17.64 லட்சத்தில் கட்டப்பட்ட பரளி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் ஆகிய கட்டிடங்களை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.

இந்த விழாக்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ., நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, மோகனூர் தாசில்தார் கதிர்வேல், மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேன்மொழி, விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் சுரேஷ்குமார், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கருமண்ணன், அணியாபுரம், தோளுர் கூட்டுறவு கடன் சங்க தலைவர் ராமச்சந்திரன், நிலவள வங்கித்தலைவர் குணசேகரன், லத்துவாடி கூட்டுறவு சங்க தலைவர் அம்மையப்பன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் மதியழகன், அணியாபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் சுதாகர், மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

எலச்சிபாளையம் அருகே பெரியமணலி பகுதியில் மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், சேலம் மக்கள் தொடர்பு களஅலுவலகம் மற்றும் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் இணைந்து தூய்மை பாரத இயக்க சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தியது. இதன் தொடக்கமாக, பெரியமணலி கோவில் வளாகத்தில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலத்தை அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார். இதில் கலந்துகொண்ட கல்லூரி மாணவ-மாணவிகள் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை முழங்கியும் சென்றனர். முன்னதாக, தூய்மை இந்தியா குறித்து நடத்தப்பட்ட, கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, பரிசுகள் மற்றும் திட்ட விளக்கவுரைகள் அடங்கிய கையேடுகளை அமைச்சர் தங்கமணி வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி, மத்திய அரசின் சேலம் களவிளம்பர உதவி அலுவலர் பி.டி.பழனியப்பன், அரசு துறை அலுவலர்கள், கல்லூரி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், தூய்மைக் காவலர்கள், மகளிர் குழுவினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பள்ளிபாளையத்தில் தமிழ்நாடு காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்து ‘ஹெல்மெட்‘ விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு காணொலி காட்சி ஒளிபரப்பு அரங்கை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி தங்கமணி, ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

விழாவில் சாலை பாதுகாப்பு குறித்த பேச்சு போட்டி, கட்டுரை போட்டி ஆகியவற்றில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து ‘ஹெல்மெட்‘ விழிப்புணர்வு ஊர்வலத்தை அமைச்சர் தங்கமணி, ஈரோடு தொகுதி எம்.பி. செல்வகுமார சின்னையன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த ஊர்வலம், பள்ளிபாளையம் பஸ் நிலையத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக போலீஸ் நிலையத்தை வந்தடைந்தது.

Next Story