குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
விழுப்புரத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் சாலாமேடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட் களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக நேற்று மதியம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் வரலட்சுமி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின், அன்புபழனி ஆகியோர் சாலாமேடு பகுதிக்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சிங்கப்பூர் நகரில் உள்ள ஒரு குடோனை சோதனை செய்ததில் அந்த குடோனில் 150 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த அஷ்ரப் என்பவர் இந்த புகையிலை பொருட்களை திருவண்ணாமலையில் இருந்து மொத்தமாக வாங்கி, குடோனில் பதுக்கி வைத்து விழுப்புரம் பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு எச்சரிக்கை நோட்டீசு வழங்கிய அதிகாரிகள், ரூ.1 லட்சம் மதிப்புள்ள அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி வரலட்சுமி கூறுகையில், தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்களின் சில மாதிரியை எடுத்து கோவையில் உள்ள உணவு பகுப்பாய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் அஷ்ரப் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளோம் என்றார்.
Related Tags :
Next Story