காந்தியடிகள் அஸ்தி கரைப்பு தினம்: ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் மலர் தூவி அஞ்சலி
ராமேசுவரத்தில் 71–வது ஆண்டு சர்வோதய மேளா நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமேசுவரம்,
தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் கடந்த 1948–ம் ஆண்டு ஜனவரி மாதம் கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் அவரது அஸ்தி நாட்டின் பல்வேறு புண்ணிய இடங்களில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது. அப்போது காந்தியடிகளின் அஸ்தி ராமேசுவரம் கொண்டு வரப்பட்டு பிப்ரவரி மாதம் 12–ந்தேதி அக்னி தீர்த்த கடலில் கரைக்கப்பட்டது. இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் சர்வோதய மேளாவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ராமேசுவரத்தில் 71–வது ஆண்டு சர்வோதய மேளா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஏராளமான பொதுமக்களும், ராமேசுவரத்தை சேர்ந்த பள்ளி மாணவ–மாணவிகளும் அக்னி தீர்த்த கடலில் இறங்கி மலர் தூவி காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து சங்கர மடத்தில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. மேலும் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அதனை தொடர்ந்து காந்தியடிகளின் உருவப்படம் கோவிலின் நான்கு ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சர்வோதய மேளா கமிட்டி துணை தலைவர் ஆண்டியப்பன், மதுரை மாவட்ட தலைவர் ரவீந்திரநாத், செயலாளர்கள் கண்ணன், ராஜூ, ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ஆறுமுகம், செயலாளர் கோவிந்தராஜ், விருதுநகர் மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, கம்பன் கழக தலைவர் முரளிதரன், அரசு பள்ளி ஆசிரியர்கள் ஜெயகாந்தன், தினகரன், கோவில் இணை ஆணையர் மங்கையர்கரசி, போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.