குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் சாவு: நெல்லை மருத்துவக்குழு பரிசோதனைக்கு பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு


குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் சாவு: நெல்லை மருத்துவக்குழு பரிசோதனைக்கு பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 12 Feb 2019 11:00 PM GMT (Updated: 12 Feb 2019 9:27 PM GMT)

குடும்ப கட்டுப்பாடு செய்த பிறகு இறந்த பெண்ணின் உடல் நெல்லை மருத்துவக்குழு பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் நட்டாலம் அருகே உள்ள புளியறைவிளையை சேர்ந்த தங்கப்பன் மகள் ஆஷா (வயது 29). பட்டதாரியான இவருக்கும், நட்டாலம் எஸ்.டி.மங்காடு பகுதியை சேர்ந்த விஜய் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

விஜய், காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரராக உள்ளார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஆஷா இரண்டாவதாக கர்ப்பம் அடைந்தார். அவரை பிரசவத்துக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்த பிறகு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த ஆஷா 10-ந் தேதி திடீரென இறந்தார்.

டாக்டர்களின் தவறான சிகிச்சையால்தான் ஆஷா இறந்ததாக அவருடைய உறவினர்கள் குற்றம் சாட்டினர். ஆஸ்பத்திரி வளாகத்திலும் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து ஆஷா சாவில் சந்தேகம் உள்ளது என்றும், வெளிமாவட்ட டாக்டர்கள்தான் ஆஷா உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவரது உறவினர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

இதையடுத்து நேற்று மதியம் ஆஷா உடல், ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதற்காக நெல்லை மருத்துவக்குழு நேற்று மதியம் நாகர்கோவில் வந்தது. அவரது உடலை நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சீதாலட்சுமி, முத்துபிரபா, செந்தில் ஆறுமுகம் மற்றும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ராஜேஷ் ஆகியோர் ஆஷா உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.

ஆஷாவின் உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டு நின்று தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் உடலை வாங்குவோம் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனே ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி டீன் ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மற்றும் போலீசார் ஆஷாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு ஆஷா உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உறவினர்களும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று காலையில் இருந்து மாலை வரை பரபரப்பாக இருந்தது.

Next Story