நாளை காதலர் தினம் கொண்டாட்டம்: மாணவ-மாணவிகளின் பெற்றோர்களுக்கு தனியார் பள்ளிகள் அறிவுரை


நாளை காதலர் தினம் கொண்டாட்டம்: மாணவ-மாணவிகளின் பெற்றோர்களுக்கு தனியார் பள்ளிகள் அறிவுரை
x
தினத்தந்தி 13 Feb 2019 3:45 AM IST (Updated: 13 Feb 2019 3:28 AM IST)
t-max-icont-min-icon

நாளை (வியாழக்கிழமை) காதலர் தினம் கொண்டாடப்படுவதை யொட்டி மாணவ-மாணவிகளின் பெற்றோர்களுக்கு பெங்களூரு தனியார் பள்ளிகள் அறிவுரை வழங்கியுள்ளது.

பெங்களூரு, 

நாளை (வியாழக்கிழமை) காதலர் தினம் கொண்டாடப்படுவதை யொட்டி மாணவ-மாணவிகளின் பெற்றோர்களுக்கு பெங்களூரு தனியார் பள்ளிகள் அறிவுரை வழங்கியுள்ளது. ‘அதிகளவு பணம்-ஆடம்பர பொருட்கள் எடுத்துச்செல்ல அனுமதிக்க கூடாது’ என்று கூறியுள்ளது.

சுற்றறிக்கை

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை (வியாழக்கிழமை) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

காதலர் தின கொண்டாட்டத்துக்கு காதல் ஜோடிகள் தயாராகி வரும் நிலையில் கர்நாடக தொடக்க மற்றும் உயர்நிலை தனியார் பள்ளிகளின் சங்கம், சங்கத்தில் அங்கம் வகிக்கும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதன்படி மாணவ-மாணவிகளின் பெற்றோர்களுக்கு பெங்களூரு தனியார் பள்ளிகள் அறிவுரை வழங்கியுள்ளது.

பணம் எடுத்துச்செல்ல அனுமதிக்கக் கூடாது

அந்த சுற்றறிக்கையில், ‘காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளதால் மாணவ-மாணவிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து பள்ளிகளுக்கு அனுப்ப அவர்களின் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். அன்றைய தினம் மாணவ-மாணவிகள் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பொய்க்கூறி பணம் வாங்கி காதலர் தினத்தை கொண்டாட வாய்ப்புள்ளது.

எனவே, அன்றைய நாள் அதிகளவு பணம், ஆடம்பர பொருட்களை பள்ளிக்கு எடுத்து செல்ல அனுமதிக்க கூடாது. இவ்வாறு கூறுவதால் மாணவ-மாணவிகள் மீது குற்றம்சுமர்த்துவதாக எண்ண வேண்டாம். இது இந்த வயதில் வரும் பொதுவான மாற்றம் தான். என்றாலும் கூட பள்ளிகள் மற்றும் பெற்றோர்கள் மாணவ-மாணவிகளை பாதுகாப்பதை கருத்தில் கொள்ள வேண்டும்’ என்பன போன்ற அம்சங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பெற்றோர்களுக்கு அறிவுரை

இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் சசி குமார் கூறுகையில், ‘காதலர் தினத்தில் கடந்த காலங்களில் சில சம்பவங்கள் நடந்துள்ளன. அதாவது, மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு வணிக வளாகங்கள், தியேட்டர்கள் மற்றும் பூங்காக்களுக்கு செல்கிறார்கள். இவ்வாறு செல்வது பள்ளி நிர்வாகங்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் தெரிவது இல்லை. இதை தடுக்க மாணவ-மாணவிகளின் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.

Next Story