வாக்காளர்களை கவரும் வகையில் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை காங்கிரஸ் கட்சி திட்டம்


வாக்காளர்களை கவரும் வகையில் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை காங்கிரஸ் கட்சி திட்டம்
x
தினத்தந்தி 12 Feb 2019 11:30 PM GMT (Updated: 12 Feb 2019 10:29 PM GMT)

வாக்காளர்களை கவரும் வகையில் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பை வெளியிட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு உள்ளது.

மும்பை, 

வாக்காளர்களை கவரும் வகையில் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பை வெளியிட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு உள்ளது.

வேலையில்லா இளைஞர்கள்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் வாக்காளர்களை கவர என்ன திட்டங்களை தேர்தல் அறிக்கையில் அறிவிக்கலாம் என அரசியல் கட்சியினர் விவாதித்து வருகின்றனர். இந்தநிலையில் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்து தேர்தல் அறிக்கையில் தெரிவிக்க மாநில காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.

இதற்காக அந்த கட்சியினர் மாநிலம் முழுவதும் 16 லட்சம் வேலையில்லா இளைஞர்களின் தகவல்களை சேகரிக்க திட்டமிட்டு உள்ளனர். இதில், மும்பையில் மட்டும் 6 லட்சம் வேலையில்லா இளைஞர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.3 ஆயிரத்து 500 உதவித்தொகை

இது குறித்து அக்கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் சத்யஜீத் தாம்பே கூறுகையில், ‘‘சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரத்து 500 வரை உதவித்தொகை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. மராட்டியத்திலும் ஆட்சியை பிடித்தவுடன் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்’’ என்றார்.

எனினும் காங்கிரசார் இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.

இதுகுறித்து மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் கூறும்போது, நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை கமிட்டி தலைவர் சிதம்பரத்தை சந்தித்தபோது, வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்து நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் சேர்க்குமாறு கோரிக்கை வைத்தோம்’, என்றார்.

Next Story