5 நாட்களாக லாரியுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பெருமாள் சிலையை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை சாலை அமைக்கும் பணி தீவிரம்


5 நாட்களாக லாரியுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பெருமாள் சிலையை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை சாலை அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 13 Feb 2019 4:30 AM IST (Updated: 13 Feb 2019 5:02 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே 5 நாட்களாக லாரியுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பெருமாள் சிலையை மாற்றுப்பாதை வழியாக கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன.

சூளகிரி,

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஈஜிபுரா பகுதியில் 108 உயரத்தில் பிரமாண்ட பெருமாள் சிலை அமைக்க அந்த பகுதி மக்கள் முடிவு செய்தனர். இதற்காக 64 அடி உயரம் மற்றும் 26 அடி அகலத்தில் பாறை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கொரக்கோட்டை மலையில் வெட்டி எடுக்கப்பட்டது.

350 டன் கொண்ட அந்த பாறையில் முகமும், 2 கைகளும் வடிவமைக்கப்பட்டு, அந்த சிலை கடந்த நவம்பர் மாதம் 7-ந் தேதி திருவண்ணாமலை பகுதியில் 240 டயர்கள் கொண்ட பிரமாண்ட லாரியில் புறப்பட்டது. பல இடங்களில் லாரியின் டயர்கள் வெடித்ததாலும், சாலைகள் குறுகலாக இருந்ததாலும் சிலையை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த லாரி கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சிங்காரப்பேட்டைக்கு வந்தது.

தொடர்ந்து அந்த சிலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை கடந்து கிருஷ்ணகிரி வழியாக குருபரப்பள்ளியை அடைந்தது. அங்கு மார்க்கண்டேயன் நதி பாலத்தில் லாரி செல்ல முடியாது என்பதால் தற்காலிகமாக மண் சாலை அமைக்கப்பட்டு, அதன் வழியாக சிலை மீண்டும் தேசிய நெடுஞ்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் பிறகு சூளகிரி அருகே மேலுமலையை தாண்டி சாமல்பள்ளம் முனியப்பன் கோவில் அருகில் சிலையுடன் லாரி நிறுத்தப்பட்டது.

அங்கு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் சிலையுடன் லாரி செல்ல நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தடை விதித்தனர். 300 டன் எடை மட்டுமே பாலத்தில் செல்ல முடியும் என்றும், லாரி மற்றும் சிலையுடன் சேர்த்து 400 டன்களுக்கு மேல் இருப்பதால் பாலம் சேதம் அடையும். எனவே லாரியை அனுமதிக்க மாட்டோம் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் கடந்த 5 நாட்களாக பெருமாள் சிலை செல்லாமல் அதே இடத்தில் லாரியுடன் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது அருகில் மாற்றுப்பாதையில் சாலை அமைக் கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்த பணிகள் ஓரிரு நாட்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு முடிவடைந்ததும், அந்த வழியாக பெருமாள் சிலை கொண்டு செல்லப்படும் என்று சிலை அமைப்பு குழுவினர் தெரிவித்தனர்.

Next Story