அன்னவாசல் அருகே காதணி விழாவிற்கு வைத்த விளம்பர பதாகை எரிப்பு போலீஸ் குவிப்பால் பரபரப்பு


அன்னவாசல் அருகே காதணி விழாவிற்கு வைத்த விளம்பர பதாகை எரிப்பு போலீஸ் குவிப்பால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Feb 2019 4:30 AM IST (Updated: 13 Feb 2019 9:14 PM IST)
t-max-icont-min-icon

அன்னவாசல் அருகே காதணி மற்றும் புதுமனை புகுவிழாவிற்கு வைத்திருந்த விளம்பர பதாகையை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்து உள்ளனர். இதில் அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே பரம்பூர் கல்லம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் பரம்பூர் கல்லம்பட்டியில் புதிய வீடு ஒன்று கட்டியுள்ளார். அதற்கு கடந்த 10–ந்தேதி புதுமனை புகுவிழா மற்றும் அன்றைய தினமே அவரது மகன்கள் கார்திக்ராஜா, மற்றும் யுவராஜாவிற்கு காதணி விழாவும் நடத்தப்பட்டது.

இதற்காக பரம்பூர் பஸ் நிறுத்தம் அருகே நண்பர்கள், உறவினர்கள் படத்துடன் பெரிய விளம்பர பதாகை ஒன்று வைக்கப்பட்டது. அந்த விளம்பர பதாகையை நேற்றுமுன்தினம் இரவு மர்ம நபர்கள் தீவைத்து கொளுத்தி உள்ளனர். இதனால் அந்த விளம்பர பதாகையின் ஒரு பக்கம் இருந்த படங்கள் அனைத்தும் தீயில் கருகி கிழிந்து தொங்கியது. இதனை நேற்று காலை பார்த்த நண்பர்கள், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


இதுகுறித்து அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் சுப்பிரமணியன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து நேற்று காலை பரம்பூர் கடை வீதியில் சுப்பிரமணியன் உறவினர்கள், நண்பர்கள் உள்பட பலர் அங்கு ஒன்று கூடினர். இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறாமல் இருக்க பரம்பூர் பஸ் நிலையம் கடைவீதி பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

Next Story