தொழில்நுட்ப உதவியுடன் விவசாயம் செய்தால் மகசூல் கிடைக்கும் கலெக்டர் கந்தசாமி பேச்சு
தொழில்நுட்ப உதவியுடன் விவசாயம் செய்தால் மகசூல் கிடைக்கும் என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.
திருவண்ணாமலை,
கோவையில் உள்ள வன மரபியல், மரப்பெருக்கு நிறுவனம் மற்றும் திருவண்ணாமலை கோட்ட வனத்துறை இணைந்து பண்ணை வருமானம் மற்றும் பசுமை பரப்பை அதிகரிக்க மேம்பட்ட மரம் வளர்ப்பு எனும் தலைப்பில் மரம் வளர்ப்போர் விழா திருவண்ணாமலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடத்தியது.
விழாவுக்கு மரப்பெருக்கு நிறுவன இயக்குனர் மொகித்கேரா தலைமை தாங்கினார். நிறுவன விரிவாக்கத்துறை தலைவர் ராஜேஷ்கோபாலன், மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர், கோட்ட வன தலைமை பாதுகாவலர் சேவாசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஞ்ஞானி மரியா டோமினிக்சாவியோ வரவேற்றார்.
விழாவையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகளுக்கு கருத்தரங்கு நடைபெற்றது. அதில், மேற்கண்ட நிறுவனம் உருவாக்கியுள்ள தேக்கு, சவுக்கு, யூக்கலிப்டஸ், பெருமரம், கடம்பம், மலை வேம்பு ஆகிய மரப்பயிர்களின் வீரிய ரகங்களின் சாகுபடி முறைகள் குறித்து விஞ்ஞானிகள், விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலெக்டர் கந்தசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டம் விவசாயத்தை நம்பியுள்ள மாவட்டமாகும். இன்றைய பிரதான பிரச்சினை நீர்வளம், எதிர்பார்த்த மழை இல்லை, போட்ட முதலீட்டிற்கு லாபம் கிடைக்குமா? என்ற நிலையில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து விவசாயம் செய்து வருகிறோம். நாம் இன்றும் ஆதிகாலத்தில் செய்த விவசாய முறையை தற்போதும் கடைபிடித்து வருகிறோம்.
அரசு பல்வேறு தொழில் நுட்பங்கள், மாற்று வழிகள், திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக அரசின் சொட்டுநீர் பாசன திட்டம் குறிப்பிட்ட பயிர்களுக்கு நல்ல பலன் தருகிறது.
மேலும், நம் மண் வளத்தை காப்பதற்காக விவசாயிகளுக்கு மண் பரிசோதனை அட்டை வழங்கப்படுகிறது. விவசாயத்தை கட்டுப்படுத்த திட்டங்கள் செயல்படுத்தவில்லை. மாறாக இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப தொழில்நுட்ப உதவியுடன் விவசாயம் செய்தால் அதிகளவு மகசூல் கிடைக்கும். மகசூல் கிடைக்கவும் விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கவும் வழிவகை செய்யப்படுகிறது. மரம் வளர்ப்பது, காடுகள் பாதுகாப்பது, பசுமை புரட்சி ஆகியவை குறித்து பேசி இருக்கிறோம்.
இந்த கருத்தரங்கு இயற்கை முன்பு விவசாயம் செய்வது குறித்தும், பயன்தரக்கூடிய மரங்கள் வளர்ப்பது குறித்தும் தெளிவாக எடுத்துரைக்கப்படுகிறது. இதன் முதல் நோக்கம் வருமானம், 2-வது நோக்கம் பசுமை. மரம் வளர்ப்பதன் மூலமும் குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் கிடைக்கும்.
ஒரு காலத்தில் 20 முதல் 25 வருடங்கள் மரம் வளர்க்கும் நிலை மாறி, தற்போது 5 முதல் 10 வருடங்களில் மரம் வளர்த்து அதன் மூலம் வருமானம் ஈட்டலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து மரம் வளர்பது குறித்த கண்காட்சியை கலெக்டர் கந்தசாமி, நிறுவன இயக்குனர் மொகித்கேரா ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர். இதில் பல்வேறு நிறுவனங்களை சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனை விவசாயிகளும் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.
விழாவில் கலெக்டர் கந்தசாமி, விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் Tree Pests of INDIA, Forest Tree Diseases என்ற 2 செயலிகளை அறிமுகப்படுத்தினார். அந்த இரு செயலிகளும் ஆங்கிலத்தில் இருந்தது. அவற்றின் பயன் என்னவென்றால் மரத்தில் ஏற்படும் நோய்கள் குறித்த விவரங்கள், அதை தாக்கும் பூச்சிகளின் விவரங்கள், அதை தடுக்கும் முறைகள் குறித்த தகவல்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் அவை அனைத்தும் ஆங்கில மொழியில் இருந்தது.
விவசாயம் செய்யும் பாமர மக்களுக்கு புரியும் வகையில் தமிழில் இந்த செயலி இருந்தால் பயனுள்ளதாக இருக்கும். மாறாக ஆங்கிலத்தில் இருப்பதால் எங்களால் அதை படித்து புரிந்து பின்பற்ற கடினமாக இருக்கும் என்று விவசாயிகள் கேள்வி எழுப்பினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், தமிழில் இந்த செயலிகள் விரைவில் அப்டேட் செய்யப்படும். விவசாயிகளுக்கு புரியும் வகையில் கொண்டு வரப்படும் என்றனர்.
Related Tags :
Next Story