பஸ் கட்டணத்தை குறைக்கக்கோரி கல்லூரி மாணவர் ‘வாட்ஸ் அப்’ மூலம் கலெக்டருக்கு கோரிக்கை
பஸ் கட்டணத்தை குறைக்கக்கோரி கல்லூரி மாணவர் வாட்ஸ் அப் மூலம் கலெக்டர் கந்தசாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கண்ணமங்கலம்,
வேலூர் முத்துரங்கம் கலைக்கல்லூரியில் படிக்கும் தமிழ்த்துறை மாணவர் சி.ராம்குமார் ‘வாட்ஸ் அப்’ மூலம் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதில், போளூரில் இருந்து படவேடு வழியாக தினமும் காலை 7.15 மணிக்கு வேலூர் செல்லும் தடம் எண் 91 என்ற அரசு பஸ்சில் சாதாரண கட்டணமாக 26 ரூபாயும், இதேபோல் வேலூரில் இருந்து படவேட்டுக்கு தினமும் வரும் தனியார் பஸ்சிலும் 26 ரூபாயும் வசூலிக்கப்பட்டது.
இதன் மூலம் படவேடு, காளசமுத்திரம், குப்பம் வழியாக செல்லும் இந்த 2 பஸ்களில் மட்டும்தான் முத்துரங்கம் அரசு கல்லூரி, ஊரீசு கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ - மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அரசு பஸ்சில் ரூ.26-க்கு பதிலாக, எக்ஸ்பிரஸ் என அதே பஸ்சை பெயர் மாற்றம் செய்து ரூ.35 வசூலிக்கப்படுகிறது. இதன் காரணமாக தனியார் பஸ்சிலும் இன்று (வியாழக்கிழமை) முதல் 30 ரூபாய் வாங்குவோம் என அறிவித்து உள்ளனர்.
பஸ் கட்டணத்தை அரசு ஏற்கனவே உயர்த்திய நிலையில், தற்போது உயர்த்தி உள்ள கட்டணத்தை குறைக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் பஸ்களில் பழைய கட்டணத்தையே நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும் என கல்லூரி மாணவ - மாணவிகள், பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
கட்டணத்தை குறைக்காவிட்டால் கல்லூரி மாணவர்கள் ஒன்று திரண்டு தடம் எண் 91 என்ற அரசு பஸ்சை சிறைபிடித்து போராடுவோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story