உளுந்தூர்பேட்டை அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதல் - தொழிலாளி சாவு
உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சின்னகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 36), தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(33) என்பவருடன் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டைக்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை நகர் ரெயில்வே மேம்பாலத்தில் வந்த போது கிருஷ்ணமூர்த்தி, சத்யராஜ் ஆகியோர் சென்ற மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் சத்யராஜ், கிருஷ்ணமூர்த்தி மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த செங்குறிச்சியை சேர்ந்த மணி(21), வல்லரசு(18) ஆகியோர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சத்யராஜ் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 3 பேருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story