2-வது நாளாக போராட்டம் நீடிப்பு, தலைமை ஆசிரியரை பணியில் சேர்க்கக்கோரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர்
வேடசந்தூர் ராஜகோபாலபுரத்தில் உள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரை பணியில் சேர்க்கக்கோரி 2-வது நாளாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேடசந்தூர்,
வேடசந்தூர் ராஜகோபாலபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 185 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் தியாகராஜன் உள்பட 6 ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் சிலரை பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது.
அதன்படி ராஜகோபாலபுரம் தலைமை ஆசிரியர் தியாகராஜனும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவருடைய பணியிடை நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் இதே பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று நேற்று முன்தினம் பெற்றோர்களுடன் மாணவர்கள் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2-வது நாளாக நேற்றும் இந்த போராட்டம் நீடித்தது. மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 185 மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் 6 மாணவர்கள் மட்டுமே வந்திருந்தனர். இதனால் பள்ளி வெறிச்சோடி காணப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் வட்டார கல்வி அலுவலர் அருண்குமார் அங்கு வந்து மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப கேட்டுக்கொண்டார்.
ஆனால் பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்துவிட்டனர். தலைமை ஆசிரியரை பணியில் சேர்க்கக்கோரி 2-வது நாளாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story