ஓசூர் அருகே பரோட்டா மாஸ்டர் எரித்துக்கொலை


ஓசூர் அருகே பரோட்டா மாஸ்டர் எரித்துக்கொலை
x
தினத்தந்தி 14 Feb 2019 4:00 AM IST (Updated: 13 Feb 2019 11:39 PM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே பரோட்டா மாஸ்டர் எரித்துக்கொலை செய்யப்பட்டார்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூரில், சர்ஜாபுரம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தோப்பில் நேற்று முன்தினம் உடல் எரிந்த நிலையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. இதைப் பார்த்து அப் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, பாகலூர் போலீஸ் நிலையத்திற்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, அந்த நபர் கொலை செய்யப்பட்டு 3 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும், இறந்த நபர் கிருஷ்ணகிரி அடுத்த மகராஜகடை அருகே உள்ள நாரலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வரதராஜன் என்பவரது மகன் சுப்பிரமணி (வயது 35) என்பதும், அவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுப்பிரமணியை தீ வைத்து எரித்துக் கொன்ற மர்ம நபர்கள் யார்? முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இறந்த சுப்பிரமணிக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார்.

Next Story