கடலூரில், தொழில் நெறி வழிகாட்டி கண்காட்சி - கலெக்டர் அன்புசெல்வன் திறந்து வைத்தார்
கடலூரில் தொழில் நெறி வழிகாட்டி கண்காட்சி மற்றும் கருத்தரங்கை கலெக்டர் அன்பு செல்வன் திறந்து வைத்தார்.
கடலூர்,
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு கடலூர் புனித வளனார் கல்லூரியில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பு செல்வன் தலைமை தாங்கி கண்காட்சியை திறந்து வைத்து, கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் தொழில் நெறி வழிகாட்டி கையேட்டை வெளியிட்டு பேசுகையில், இன்றைய தினம் வங்க கடலில் சிறிது நில அதிர்வு ஏற்பட்டு உள்ளதை தகவல் தொழில் நுட்பம் மூலம் அனைவரும் உடனடியாக தெரிந்து கொண்டோம். இதுபோன்ற தகவல் தொழில் நுட்ப புரட்சியைப்போல், எதிர்காலத்தில் விவசாயத்தில் நீங்கள் ஏற்படுத்த வேண்டும். தொழில் முனைவோருக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. இதனை தொழில்முனைவோர்கள் பயன்படுத்தி சிறந்த தொழில்முனைவோராக உயர வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து அவர் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் மாயதேவர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் பாலமுருகன், கல்லூரி செயலாளர் அருட்தந்தை பீட்டர் ராஜேந்திரம், ரெயில்வே அதிகாரி பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story