தஞ்சை பெரியகோவிலில் புற்களை பாதுகாக்க இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி


தஞ்சை பெரியகோவிலில் புற்களை பாதுகாக்க இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி
x
தினத்தந்தி 13 Feb 2019 10:45 PM GMT (Updated: 13 Feb 2019 6:28 PM GMT)

தஞ்சை பெரியகோவிலில் புற்களை பாதுகாக்க இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்,

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலை கட்டி தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்து இருப்பவர் மாமன்னன் ராஜராஜ சோழன். இந்த கோவிலின் கட்டிடக்கலை மற்றும் கலையம்சம் காரணமாக அதனை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. உலகில் உள்ள சிவாலயங்களுக்கு மகுடமாக தஞ்சை பெரியகோவில் திகழ்கிறது. இந்த கோவில் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல்துறை பராமரிப்பில் உள்ளது.

இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், முருகர், நடராஜர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். விடுமுறை நாட்களிலும், பிரதோ‌ஷ நாட்களிலும் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்படும்.


மாலை நேரங்களில் தங்களது குழந்தைகளுடன் வருபவர்கள், பெரியகோவில் வளாகத்தில் உள்ள புல்தரையில் அமர்ந்து பேசி கொண்டு இருப்பார்கள். மேலும் பலர், வீட்டில் இருந்து உணவு பொருட்களை கொண்டு வந்து சாப்பிடுவது உண்டு. குழந்தைகள் புல்தரையில் அங்கும், இங்குமாக ஓடி விளையாடி மகிழ்ச்சி அடைவார்கள். இப்படி புல்தரையில் ஆட்கள் நடந்து செல்வதால் புற்கள் வளராமல் காய்ந்துவிடுகின்றன.

எவ்வளவு தான் தண்ணீர் பீய்ச்சி அடித்தாலும் புற்கள் வளர்வதில்லை. புல்தரையில் யாரும் அமரக்கூடாது. குழந்தைகளை விளையாட அனுமதிக்கக்கூடாது என விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டும், யாரும் அதை பொருட்படுத்தாமல் வழக்கம்போல் புல்தரையில் அமர்ந்து வருகின்றனர். இதனால் புல்தரையை சுற்றிலும் இரும்பினால் ஆன தடுப்புகளை ஏற்படுத்தி புற்களை பாதுகாக்க தொல்லியல்துறையும், கோவில் நிர்வாகமும் முடிவு செய்தது.


அதன்படி ராஜராஜன்கோபுரம், கேளராந்தகன் கோபுரத்திற்கு இடையே வலது, இடது புறங்களில் உள்ள புல்தரையை சுற்றிலும் இரும்பினால் ஆன தடுப்புகள் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. தொழிலாளர்கள் சிறிய, சிறிய குழிகளை தோண்டி தடுப்புகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இனிமேல் மக்கள் யாரும் புல்தரைக்கு செல்ல முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பக்தர்கள் கூறும்போது, புற்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை பாராட்டுக்குரியது. விசே‌ஷ நாட்களில் சாமி ஊர்வலத்திற்கு பயன்படுத்தப்படும் இரும்பினால் செய்யப்பட்ட தள்ளுவண்டிகள் வெயிலிலும், மழையிலும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த வண்டிகளை பாதுகாப்பாக நிறுத்த கொட்டகை அமைக்க வேண்டும் என்றனர்.

Next Story