மேட்டூர் அணை நீர்மட்டம் 69.96 அடியாக குறைந்தது


மேட்டூர் அணை நீர்மட்டம் 69.96 அடியாக குறைந்தது
x
தினத்தந்தி 14 Feb 2019 4:00 AM IST (Updated: 14 Feb 2019 12:13 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணை நீர்மட்டம் 69.96 அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர்,

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூலை மாதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் பாசன தேவைக்கு ஏற்ப அதிகரித்தோ அல்லது குறைத்தோ மாறி மாறி திறக்கப்பட்டது. தண்ணீர் திறப்பு கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து ஒரு சில நாட்களுக்கு பின்னர் டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு தமிழகத்திற்கு பருவமழை கைகொடுக்கவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவை பொறுத்து வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்தது. வினாடிக்கு 200 கனஅடிக்கும் கீழ் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை விட அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைவாக இருப்பதால் அணை நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது.

நேற்று முன்தினம் அணை நீர்மட்டம் 70.02 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 95 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று அணை நீர்மட்டம் 69.96 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 107 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கடந்த 7 மாதங்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 70 அடிக்கு கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால் நீர்த்தேக்க பகுதியான பண்ணவாடியில் மூழ்கி இருந்த நந்தி சிலை, கிறிஸ்தவ கோபுரம் ஆகியவை வெளியே தெரிகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர்.

Next Story