பாரதியார் கலை, அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதி இல்லாததால் மாணவ-மாணவிகள் அவதி


பாரதியார் கலை, அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதி இல்லாததால் மாணவ-மாணவிகள் அவதி
x
தினத்தந்தி 14 Feb 2019 4:30 AM IST (Updated: 14 Feb 2019 12:55 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் பாரதியார் கலை, அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதி இல்லாததால் மாணவ-மாணவிகள் கடும் அவதிப்படுகின்றனர். இதனால் காலை, மாலை நேரங்களில் பஸ் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சியில் அரசு கலை கல்லூரி அமைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழக கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. தற்போது கல்லூரி மகாலிங்கபுரம் சமத்தூர் ராம அய்யங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. இங்கு கல்லூரி முதல்வர் மற்றும் அலுவலர்கள் 2 பேர் மட்டும் நிரந்தரமாக பணியாற்றி வருகின்றனர். இது தவிர தொகுப்பு ஊதியத்தில் 13 பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கல்லூரி தொடங்கி 2 ஆண்டுகள் ஆகியும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. பஸ் வசதி இல்லாததால் பஸ் நிலையத்தில் இருந்து மாணவ-மாணவிகள் நடந்தே கல்லூரிக்கு வர வேண்டியது உள்ளது. மேலும் கழிப்பிட வசதியும் இல்லாததால் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு கடந்த 2017-ம் ஆண்டு பொள்ளாச்சியில் பாரதியார் பல்கலைக்கழக கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. கல்லூரியில் பி.ஏ. (ஆங்கிலம்), பி.எஸ்.சி. (கணிதம்), பி.பி.ஏ., பி.காம். சி.ஏ., பி.காம்., ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. இங்கு மாணவிகள் 420 பேர் உள்பட 528 பேர் படித்து வருகின்றனர். கல்லூரி தொடங்கி 2 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

பி.காம். சி.ஏ. படிப்பிற்கு தனியார் கல்லூரிகளில் ஒரு செமஸ்டருக்கு ரூ.40 ஆயிரம் வரை கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் இங்கு 3 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் செலவில் மாணவ-மாணவிகள் படித்து பட்டம் பெற்று விடுகின்றனர். இது தவிர உதவித்தொகை வேறு வழங்கப்படுகின்றது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் குழந்தைகள் இங்கு அதிகம் படித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் மாணவ-மாணவிகளுக்கு எந்தவித வசதிகளும் இல்லாத நிலை உள்ளது. தற்போது கல்லூரி செயல்பட்டு வரும் பள்ளி வளாகம் 10¾ ஏக்கர் பரப்பளவு கொண்டது. மொத்தம் உள்ள 3 தளங்களில் 30 வகுப்பறைகள் உள்ளன. இதில் 13 அறைகள் கல்லூரிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. பேராசிரியர்கள் ஓய்வு அறை, கணினி அறை, அலுவலக அறை மற்றும் வகுப்பறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. போதிய வசதி இல்லாததால் வராண்டாவில் ஒரு சில வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன.

வருகிற கல்வி ஆண்டு முதல் கூடுதலாக வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் தேவைப்படும். மேலும் ஒவ்வொரு வகுப்பறையும் 40 மாணவர்கள் அமரும் வகையில்தான் உள்ளது. ஆனால் கல்லூரி மாணவர்கள் 60 பேர் வரை ஒரே வகுப்பறையில் வைத்து பாடம் சொல்லி கொடுப்பது சிரமமாக உள்ளது. இதன் காரணமாக வகுப்பறைகள் பற்றாக்குறை, இடநெருக்கடி ஆகிய சூழ்நிலைகளில் மாணவ-மாணவிகள் கல்வி கற்று வருகின் றனர்.

ஆண்கள், பெண்களுக்கு தனி, தனியாக 2 கழிப்பிடங்கள் மட்டும் உள்ளன. இதை தான் முதல்வர் முதல் பேராசிரியர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர். 10 நிமிடங்கள் விடப்படும் இடைவெளியில் 400 மாணவிகள் ஒரு கழிப்பிடத்தை எப்படி பயன்படுத்த முடியும். கூடுதலாக இருக்கிற 2 கழிப்பிடங்கள் பராமரிப்பு இல்லாமல் புதர்செடிகள் முளைத்து கிடக்கின்றது. மேலும் கல்லூரிக்கு பஸ் வசதி இல்லாததால் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விகுறியாகி உள்ளது.

கல்லூரிக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து வரவேண்டியது உள்ளது. இதே கல்லூரிக்கு நேரடியாக பஸ் வசதி இருந்தால் சிரமத்தை தவிர்க்கலாம். எனவே காலை 9 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையும் பல்லடம் ரோட்டில் செல்லும் பஸ்களை மகாலிங்கபுரத்தில் உள்ள கல்லூரி வழியாக திருப்பி விட வேண்டும். இருநேரங்களும் குறைந்தது 3 பஸ்கள் இயக்கினால் போதும்.

இதுகுறித்து கோரிக்கை விடுத்தும் இதுவரைக்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு வரும்போதும், செல்லும்போதும் நடந்து வரும் நிலை உள்ளது.

எனவே பாரதியார் கலை, அறிவியல் கல்லூரிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story