மாணவிகளிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய உதவி பேராசிரியர் பணிநீக்கம்


மாணவிகளிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய உதவி பேராசிரியர் பணிநீக்கம்
x
தினத்தந்தி 13 Feb 2019 11:00 PM GMT (Updated: 13 Feb 2019 8:00 PM GMT)

கோவை அருகே உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகளிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய உதவி பேராசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

போத்தனூர், 

கோவை க.க.சாவடி அருகே ஸ்ரீநாராயணகுரு கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு உதவி பேராசிரியராக மணிகண்டன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவிகள் சிலரிடம் செல்போனில் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி, பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் சக கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று முன்தினம் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

இதை தொடர்ந்து நேற்று காலை கல்லூரிக்கு வந்த மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உதவி பேராசிரியர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

இதையடுத்து நிர்வாகத்தினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உதவி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகள் கூறினர். நடவடிக்கை எடுப்பதாக கல்லூரி நிர்வாகத்தினர் உறுதியளித்தனர். இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த நிலையில் புகார் கூறப்பட்ட உதவி பேராசிரியரை கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.

இது குறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கூறும்போது, உதவி பேராசிரியர் முதலாம் ஆண்டு மாணவிகளிடம் செல்போனில் தவறாக பேசி தொந்தரவு கொடுப்பதாக எங்களுக்கு நேற்று முன்தினம் புகார் வந்தது. பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தி மணிகண்டனை பணிநீக்கம் செய்து விட்டோம். இருப்பினும் எழுத்து பூர்வமாக அறிவிக்க வேண்டும் என கோரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். அதனைத்தொடர்ந்து மாணவர்களிடம் தெளிவுபடுத்தி அனுப்பி வைத்தோம், என்றனர்.

Next Story