பட்டத்தரசி அம்மன் கோவிலில் 1½ அடி உயர ஐம்பொன் சிலை திருட்டு
கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலில் 1½ அடி உயர ஐம்பொன் சிலை திருடுபோனது. சாக்குமூட்டையில் கட்டி சாக்கடையில் வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை,
கோவை பாப்பநாயக்கன்பாளையம் அருந்ததியர் வீதியில் பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இந்த கோவிலில் கார்த்திக் (வயது 35) என்பவர் பூசாரியாக உள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை பூசாரி கார்த்திக் கோவிலுக்கு சென்றபோது கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது கோவிலின் கருவறையில் இருந்த 1½ அடி உயர பட்டத்தரசி அம்மன் ஐம்பொன் சிலை திருடப்பட்டு இருந்தது. அத்துடன் கோவிலில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த பணத்தை காணவில்லை. இந்த சம்பவம் குறித்து அறிந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கோவில் முன்பு திரண்டனர்.
இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண மோப்ப நாய் ‘சாரா’ வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. அத்துடன் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர்.
இந்த கோவிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை. இதனால் அருகில் உள்ள ஒரு வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், அதிகாலை 3 மணியளவில் 2 பேர் அங்கு வந்து கோவில் பூட்டை உடைத்து, சிலையை திருடிச்செல்வது தெளிவாக தெரிந்தது.
இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். இதற்கிடையே, திருட்டு நடந்த கோவில் அருகே சாக்கடை கால்வாய்க்குள் சாக்குமூட்டை கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று சாக்குமூட்டையை மீட்டு அதனை திறந்து பார்த்தனர்.
அதற்குள் கோவிலில் திருடப்பட்ட ஐம்பொன் சிலை இருந்தது. அதில் இருந்த 5 கிராம் தங்க தாலியை மட்டும் காணவில்லை. சிலையை திருடிய மர்ம ஆசாமிகள், போலீசுக்கு பயந்து அதில் இருந்த தாலியை மட்டும் எடுத்துக்கொண்டு சிலையை சாக்கடையில் வீசிச்சென்றது தெரியவந்தது. போலீசார் அந்த சிலையை மீட்டனர்.கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் கோவில் அருகே இருக்கும் ராமபுரத்தை சேர்ந்த தண்டபாணி (32) என்பவர் தனது நண்பருடன் சென்று திருடியது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த தண்டபாணியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர், தனது நண்பருடன் சேர்ந்து சிலையை திருடியதும், உண்டியலில் இருந்த பணத்தை நண்பர் எடுத்து சென்றதால் அதில் இருந்த பணம் எவ்வளவு என்பது தெரியவில்லை என்றும் கூறினார். தலைமறைவாக உள்ள தண்டபாணியின் நண்பரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story