சீகூர் வனப்பகுதியில், நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்பும் பணி மும்முரம்


சீகூர் வனப்பகுதியில், நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்பும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 14 Feb 2019 4:15 AM IST (Updated: 14 Feb 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

சீகூர் வனப்பகுதியில் நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்பும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

மசினகுடி,

நீலகிரியில் மிகவும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக சீகூர் உள்ளது. இந்த வனப்பகுதியில் மனிதர்கள் நடமாட்டம் இருக்காது. இங்கு காட்டுயானை, புலி, சிறுத்தைப்புலி, செந்நாய், கரடி, சுருள்கொம்பு மான் உள்பட பல்வேறு வகை வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

முதுமலை புலிகள் காப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சீகூர் வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் குளம், குட்டை, தடுப்பணை, ஆறு என அனைத்து நீர்நிலைகளும் வறண்டு காணப்படுகின்றன. இதன் காரணமாக வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வனவிலங்குகளை பாதுகாக்கும் நடவடிக்கையை சீகூர் வனத்துறையினர் எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வறண்டு போன நீர்நிலைகளில் தண்ணீர் ஊற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சொக்கநள்ளி ஆற்றில் இருந்து லாரிகளில் தண்ணீர் எடுத்து வரப்பட்டு, நீர்நிலைகளில் ஊற்றப்பட்டு வருகிறது. இதுகுறித்து சீகூர் வனச்சரகர் செல்வம் கூறியதாவது:-

சீகூர் வனப்பகுதி முட்புதர் காடுகள். எனவே பசுந்தீவனங்கள் அதிகளவில் உள்ளன. இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் முதல் அரிய விலங்கான எறும்பு திண்ணி வரை வாழ்ந்து வருகின்றன. இவற்றுக்கு வறட்சி காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வனவிலங்குகள் குடிக்க ஒரு நாளைக்கு 45 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நீர்நிலைகளில் ஊற்றப்பட்டு வருகிறது. இந்த பணி குறிப்பாக ஜகளிகடவு, மாலப்புரபட்டி, சிறியூர், அசுரமட்டம் உள்பட வனப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வனவர் சித்தராஜ், வனகாப்பாளர் மசனன் ஆகியோர் தலைமையில் தண்ணீர் ஊற்றும் பணி நடைபெற்று வருகிறது. தினமும் லாரிகள் மூலம் தண்ணீர் எடுத்து சென்று ஊற்றும் போதே வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க வந்துவிடுகின்றன. தற்போது ஊற்றும் தண்ணீரை காட்டுயானை போன்ற பெரிய வனவிலங்குகள் முதல் சிட்டுக்குருவிகள் வரை வந்து குடித்து செல்கின்றன.

ஒவ்வொரு இடத்திலும் ஊற்றப்படும் தண்ணீர் தீர்ந்தவுடன் மீண்டும் அந்த இடத்தில் தண்ணீர் ஊற்றப்படும். இந்த கோடை காலம் முடிந்து மீண்டும் மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பும் வரை இந்த பணி நடைபெறும். குறிப்பாக தண்ணீர் ஊற்றப்படும் இடங்களில் நவீன தானியங்கி கேமராக்கள் பொருத்தபட்டு தண்ணீர் குடிக்கும் வனவிலங்குகள் கண்காணிக்கப்படு கின்றன.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story