மனுநீதி நாள் முகாம், ரூ.20 லட்சத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


மனுநீதி நாள் முகாம், ரூ.20 லட்சத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 13 Feb 2019 11:00 PM GMT (Updated: 13 Feb 2019 8:09 PM GMT)

மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பொக்காபுரத்தில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி, பொக்காபுரம் மாரியம்மன் இயற்கை பண்ணை விவசாயிகள் சங்கத்திற்கு வீட்டு தோட்டம் அமைக்க மூன்றாம் கட்ட நிதியாக ரூ.2 லட்சத்துக்கான காசோலை, 3 பேருக்கு ரூ.26 ஆயிரம் மதிப்பில் தையல் எந்திரங்கள், தோட்டக்கலைத்துறை சார்பாக சோலூர் கிராமத்தை சேர்ந்த 10 பேருக்கு ரூ.2.12 லட்சம் மதிப்பில் விதைகள் உள்பட மொத்தம் 278 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2017-2018-ம் நிதியாண்டில் ரூ.2.74 கோடி மதிப்பில் பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், ரூ.6 கோடி செலவில் 318 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வீடு கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு, வீடு கட்டாமல் உள்ள பயனாளிகள் வீடுகள் கட்ட குழுக்கள் அமைத்து, அதன் மூலம் நிதி திரட்டி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு வீட்டிற்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் 64 வீடுகளை பழுது பார்க்கும் பணி நடக்கிறது.

தூய்மை பாரத இயக்கம் சார்பில், தனிநபர் கழிப்பிடம் கட்ட பேரூராட்சிகள் சார்பில் ரூ.8 ஆயிரமும், ஊராட்சிகள் சார்பில் ரூ.12 ஆயிரமும் வழங்கப்படுகிறது. பிரதான் மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், 5 ஏக்கருக்கு குறைவாக விவசாய நிலம் உள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்து நான்கு மாதத்திற்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. முகாமில் ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் கல்லட்டி முதல் சோலூர் வரை ரூ.114 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ள தார்ச்சாலையை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Next Story