மாவட்ட செய்திகள்

காதலர் தினம், ஊட்டியில் ரோஜா பூக்கள் விலை உயர்வு + "||" + Valentine's Day, Ooty The price increase rose flowers

காதலர் தினம், ஊட்டியில் ரோஜா பூக்கள் விலை உயர்வு

காதலர் தினம், ஊட்டியில் ரோஜா பூக்கள் விலை உயர்வு
காதலர் தினத்தையொட்டி ஊட்டியில் ரோஜா பூக்கள் விலை உயர்ந்து உள்ளது.
ஊட்டி,

உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் மலர்கள், வாழ்த்து அட்டைகள், சாக்லேட் மற்றும் பரிசு பொருட்களை தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பரிசளித்து மகிழ்வார்கள். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு காதலர் தினத்தன்று காதலர்கள் அதிகளவில் வருகை தருவார்கள். மேலும் புதிதாக திருமணமான தம்பதிகள் ஊட்டிக்கு வந்து தங்களது அன்பை பரிமாறிக் கொள்வார்கள்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், படகு இல்லம், தேயிலை பூங்கா, மரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் இன்று காதலர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போதைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட் செல்போன்கள் மூலம் வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழியாக காதலர் தின குறுஞ்செய்தி, புகைப்படங்களை அனுப்பினாலும், ரோஜாப்பூ மற்றும் வாழ்த்து அட்டைகளை கொடுப்பது இன்றும் பெருமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஊட்டியில் பல வகை மலர்கள் மற்றும் கொய்மலர்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. காதலர் தினத்தையொட்டி ஊட்டியில் உள்ள மலர் விற்பனையகங்களில் ரோஜா பூக்கள், கார்னேசன், லில்லியம், புளுடைசி, ஜெர்புரா, ஆர்கிட் மலர்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு ரோஜாப்பூ ஒன்று ரூ.15-க்கு விற்பனை ஆனது. இந்த ஆண்டு ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு தாஜ்மஹால் ரோஜா வகை பூக்கள் விற்பனைக்கு வந்து உள்ளது.

மஞ்சள், சிவப்பு, வெள்ளை, பிங்க், ஆரஞ்சு ஆகிய நிறங்களில் ரோஜாப்பூக்கள் உள்ளன. காதலர் தினத்தையொட்டி ஊட்டியில் ரோஜா பூக்கள் விலை உயர்ந்து இருக்கிறது. காதலர் தினத்தன்று மனம் கவர்ந்தவர்களுக்கு ரோஜாப்பூ மற்றும் விதவிதமான பரிசுகளை கொடுத்து தங்களது அன்பையும், காதலையும் வெளிப்படுத்துவார்கள். தாஜ்மஹால் ரோஜாப்பூ உள்ளிட்ட பூக்களை வாங்க காதலர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.